கொரோனா அச்சம் எதிரொலியாக அவுஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் ஒரு வார கால ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அவுஸ்திரேலியா தற்போது 2வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. அங்கு உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களை டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ளது.
முக்கியமாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. அங்கு தொடர்ந்து 7வது வாரமாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை. நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டும் சிட்னி நகரில் 344 பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 பேர் அந்த கொடிய வைரசுக்கு பலியாகினர். இதையடுத்து அந்த நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் தலைநகர் கான்பெராவில் ஓராண்டுக்கும் மேலான கால கட்டத்தில் இப்போது ஒரே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொடர்ந்து பரவலைத் தடுப்பதற்காக ஒரு வார கால ஊரடங்கு பொதுமுடக்கம் அங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.