யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகள், அதி தீவிர சிகிச்சைப் பிரிவு, கோப்பாய் இடைநிலை சிகிச்சை மையம் என்பன நோயாளர்களால் நிறைந்து விட்டது. இந்த நிலையில் விபத்து, குழு மோதல்களால் தினமும் 70-80 நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது பெரிய சுமையாக உள்ளது.
இதுவரை ஒட்சிசனை பெற்ற அனுராதபுரத்திலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் தேங்கிக் கிடக்கின்றன என தெரிவித்துள்ளார் வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்தியர் சிறிபவானந்தராஜா.
இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விடுதிகள், அதிதீவிர சிகிச்சைப்பிரிவு நோயாளர்களால் நிறைந்துள்ளது.
கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பெரும் நெருக்கடியை சந்திக்கிறோம். கோப்பாய் இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தில் 420 பேரே தங்கி சிகிச்சை பெற முடியும். ஆனால் இன்று 430 இற்கும் மேற்பட்டவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.
வைத்தியசாலைக்கு தேவையான ஒட்சிசன் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.இதுவரை அனுராதபுரத்திற்கு தினமும் வாகனங்களை அனுப்பி ஒட்சிசனை பெற்றோம். ஆனால் அனுராதபுரத்திலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நேற்று முதல் கொழும்பிற்கு வாகனங்களை அனுப்புகிறோம்.
யாழ் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களை கோம்பையன் மயானத்தில்தான் தகனம் செய்யும் வசதியுண்டு. தினமும் 4 சடலங்களை மட்டுமே அங்கு கொண்டு செல்ல முடியும். கடந்த 5 மாதங்களில் யாழ் போதனா வைத்தியசாலையில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனைய வைத்தியசாலைகளில் 16 பேர் உயிரிழந்தனர். தகனம் செய்ய திகதி பெற முடியாமல் வைத்தியசாலையில் பல உடல்கள் தேங்கியுள்ளன என்றார்.