வட கிழக்கு மாநிலமான அசாமின், சாரீடியோ மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தையை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அண்மையில் இரவு நேரத்தில் கடத்திச் சென்றனர். அவரது தங்கையை காணவில்லை என, அக்குழந்தையின் மூத்த சகோதரி செஃப்ரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, காணாமல் போன குழந்தையின் உடல் அருகில் உள்ள ஆற்றங்கரை அருகே மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குழந்தையின் உடல் செவ்வாய் கிழமை இரவு சிங்களு ஆற்றங்கரை அருகே மீட்கப்பட்டது. சிவப்பு துணி, சாம்பல் உட்பட தாந்திரீகம் செய்யும் போது பயன்படுத்தும் பொருட்கள் அங்கு காணப்படுகின்றன. எனவே, குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம். உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளியை தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். குழந்தையின் அப்பா உட்பட 10 பேரை அடுத்தகட்ட விசாரணைக்காக அழைத்து வந்துள்ளோம்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நரபலி நடந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. பழங்குடியினர் அதிகம் வாழும் தேயிலை தோட்டங்களில் இம்மாதிரியான நரபலி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.