கேரளாவின், வயநாட்டில் உள்ள கேரள வன மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் உள்ள கம்பமலா தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 27 வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தோட்ட நிர்வாகத்துடன் நடந்த பேச்சுக்கள் வெற்றியளிக்காததை தொடர்ந்து போராட்டம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
கோவிட் காரணமாக நிதி விளைவுகளைக் காரணம் காட்டி எஸ்டேட் அதிகாரிகள் தொழிலாளர்களிற்கு வேலை வழங்க மறுத்திருந்தனர். சுமார் 40 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜூலை 15 அன்று போராட்டம் தொடங்கப்பட்டது.
புதன்கிழமை கேரள வன மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநருடனான சந்திப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
“செப்டம்பர் 1 முதல் எங்களை மீண்டும் பணியில் அமர்த்துவதாக அவர்கள் உறுதியளித்தனர், ஆனால் அது ஒரு நிரந்தர வேலையாக இருக்கும் என்று அவர்கள் எங்களுக்கு உறுதியளிக்கவில்லை. மேலும், இது எங்கள் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை. நாங்கள் ஜூலை முதல் வேலையில்லாமல் இருப்பதால் எங்களுக்கு விரைவில் வேலை தேவை” என தொழிலாளர்களில் ஒருவரான சிவகுமார் கூறினார்.
கொட்டியூர் மற்றும் பெரிய வனப்பகுதிகளை ஒட்டிய கம்பமலா தேயிலைத் தோட்டம் 100 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் இது 1979 இல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சுமார் 120 குடும்பங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு எஸ்டேட்டில் வேலை கொடுக்கப்பட்டது.
“ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் எஸ்டேட்டில் வேலைக்குத் தகுதியானவர்கள். பல வருடங்களாக இப்படித்தான் நடந்து கொண்டிருந்தது. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்கள் பல வருடங்களாக வேலை செய்தாலும் அவர்களின் வேலை நிரந்தரம் செய்யப்படவில்லை” என சிவகுமார் கூறினார்.
எஸ்டேட்டில் வேலைதான் அவர்களுடைய ஒரே வருமான வழி என்பதால், அவர்களின் குடும்ப நிலை மோசமாக உள்ளது.
“கோவிட் காரணமாக நாம் அனைவரும் நிதி ரீதியாக கஷ்டப்படுகிறோம். பில்களை செலுத்த முடியாததால் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளை தொடர முடியவில்லை. அரசாங்கத்தின் உணவு கிட் மட்டுமே எங்களுக்கு நிவாரணம். ஆனால் அதை மட்டும் நம்பி நாம் எப்படி வாழ முடியும்,” என அவர் கேள்வியெழுப்பினார்.