தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார். பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இதையடுத்து இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருது பெற்றது. பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்களை இயக்கினார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமனிதன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.