ஆப்கானிஸ்தானின் இராணுவத் தளபதியை மாற்றி அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரஃப் கனி உத்தரவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.
முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறுகிய காலத்தில் 9 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். குண்டூஸ், தலூக்கான், ஷேபேர்கான், ஜரான்ஜ், சமங்கன், ஃபாரா உள்ளிட்ட 9 மாகாணங்களை தலிபான்கள் வசம் சென்றுவிட்டது.
ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் தலிபான்களிடம் 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சரணடைந்தனர்.
இந்நிலையில், நாட்டின் இராணுவத் தளபதியை ஜனாதிபதி அதிரடியாக மாற்றியுள்ளார். ஆப்கான் சிறப்பு தாக்குதல்கள் படையின் தளபதியாக இருந்த ஹிபதுல்லா அலிசாய் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனரல் வாலி அஹமத்சாய் விடைபெறுகிறார்.