ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- மு.க.ஸ்டாலின்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப்புகழ் வாய்ந்த ஒன்றாகும்.
முதலாம் ராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைகளின் அழகிய தொகுப்பாகவும், வாழும் வரலாறாக விளங்குகிறது.
அண்மையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலகப் புராதன பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பினைக் கண்டுகளித்திட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமரிசையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவில் கொண்டாடப்படுகிற இவ்விழாவினை அரசு விழாவாகக் கொண்டாட அப்பகுதிவாழ் மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் சார்பில் பல இடங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
தற்போதைய நேரத்தில் நிலவி வரும் நோய்த்தொற்று காரணமாக, வரும் ஆண்டு முதல் இந்த விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.