நாட்டில் தீவிரமடைந்துள்ள டெல்டா திரிபு உள்ளிட்ட கொவிட் – 19 வைரஸிடமிருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது மாத்திரமே ஒரேயொரு மாற்று வழியாகும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,
உலகிலுள்ள பல நாடுகளைப் போலவே இலங்கையிலும் டெல்டா திரிபு வேகமாக பரவி வருகிறது. சகல பிரஜைகளும் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இது வரையில் தொற்றுக்கு உள்ளானவர்களில் 1.5 வீதமானோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டிய நிலையிலுள்ளனர். இந்த அச்சுறுத்தலுக்கு இரையாகாமல் இருக்க வேண்டுமெனில் தாமதிக்காமல் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதோடு , அடிப்படை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.
இலங்கையில் இதுவரையில் 3,24,000 இற்கும் அதிக கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மரணங்களின் எண்ணிக்கை 5,000 ஐ அண்மித்துள்ளது.
உயிரிழந்த 4,919 பேரில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களாகும்.
இவர்களில் இரு கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் 9 மாத்திரமே உள்ளடங்குகின்றனர். இவர்களும் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்த 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.
டெல்டா பரவலால் நோய் நிலைமை தீவிரமாகவுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது. இதனால் பிரதான வைத்தியசாலைகள் பலவற்றில் கொள்ளவை மீறி தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோர் தீவிர தொற்று அறிகுறிகளுடன் காணப்படுவதால் இடைநிலை சிகிச்சை நிலையங்களிலும் வீடுகளிலும் வைத்து சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.
தீவிர தொற்று அறிகுறிகள் எனும் போது நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களில் 20 சதவீதமானோர் ஒட்சிசன் தேவையுடையவர்களாவுள்ளனர்.
ஆனால் நாட்டில் ஒட்சிசன் மற்றும் செயற்கை சுவாச கருவிகள் பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதனாலேயே அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மக்கள் அதிகளவில் ஒன்றுகூடக் கூடிய மங்கள மற்றும் அமங்கள நிகழ்வுகளில் மற்றும் அவை போன்ற வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுங்கள். பொது இடங்களுக்குச் செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணியுங்கள்.
அடிக்கடி சவர்க்காரமிட்டு கைகளை சுத்தமாகக் கழுவுங்கள். பிரிதொரு நபரிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரண்டு மீற்றர் இடைவெளியைப் பேணுங்கள்.
நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எனில் தொழில் நிமித்தம் அன்றி வேறு எதற்காகவும் வெளியில் செல்ல வேண்டாம்.