இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி பொருளாளர் பீற்றர் இளஞ்செழியன் இன்று கிளிநொச்சியில் உள்ள தீவிரவாத ஒடுக்குமுறை மற்றும் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.
இன்று முன்னிலையாகுமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய இன்று காலை விசாரணைக்கு பிரசன்னமானதாகவும், மே 18 நினைவேந்தல் குறித்து வினவப்பட்டதாகவும் இளஞ்செழியன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று கிளிநொச்சியிலுள்ள தீவிரவாத ஒடுக்குமுறை மற்றும் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகினேன். சி.சிறிதரனுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டித்தேனா என வினவினர். இல்லையென்றேன். தம்மிடம் புகைப்பட ஆதாரமிருப்பதாக கூறி, கடந்த வருடம் இடம்பெற்ற நினைவஞ்சலி படத்தை காண்பித்தனர்.
அவர்கள் கேட்டது தவறான தகவலென்பது தெரிவித்தேன். அந்த புகைப்படத்தில் இருந்தது சிறிதரன் அல்ல சிவஜிலிங்கம் என்றும், கடந்த முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலியில் அவரும் கலந்து கொண்டதாக தெரிவித்தேன்.
25 பேர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினீர்களா என வினவினர். 5 பேர் மாத்திரமே கலந்து கொண்டதாக தெரிவித்தேன்.
எனது தொலைபேசி, கடவுச்சீட்டு இலக்கங்கள், பேஸ்புக் ஐடி, வட்ஸ்அப், வைபர் இலக்கங்கள், மனைவியின் அடையாள அட்டை, தொலைபேசி இலக்கங்களை பெற்றுக் கொண்டனர்“என்றார்.