வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆலய பூசகர்கள், உபயகாரர்கள், தொண்டு செய்பவர்கள் என 100 பேருடன் மட்டுமே ஆலய திருவிழா நடத்தப்படவுள்ளது. ஆலயத்திற்குள் நுழையும் பாதைகள் அனைத்திலும் பொலிஸ் சாவடிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் நுழைவது தடைசெய்யப்படும்.
புதிய கட்டுப்பாடுகளிற்கு இணங்க பக்தர்கள் யாரும் திருவிழாவிற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். காவடிகள் அனுமதிக்கப்படாது. இதனால் காவடியெடுத்து வந்து ஆலயத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பும் சௌகரிய நிலைமையை ஏற்படுத்த வேண்டாமென பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவுள்ளது.
ஆலய திருவிழா ஒழுங்குகள் குறித்து இன்று ஆலய நிர்வாகத்திற்கு விளக்கமளிக்கப்பட்டது. பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவகர், பொலிசார் இன்று ஆலயத்திற்கு சென்று, ஆலய அறங்காவலர் சபையிடம் திருவிழா நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இன்று விளக்கமளிக்கப்பட்டபடி, செல்வச்சந்நிதி முருகன் ஆலய திருவிழாவில் பின்வரும் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்.
♦ அர்ச்சகர்கள், தொண்டர்கள், உபயகாரர்கள் (100 பேருக்கு உட்பட்ட எண்ணிக்கையில்) மட்டுமே திருவிழாவில் பங்குபற்ற முடியும். இவர்களை விட, வெளியில் இருந்து பக்தர்கள் யாரும் திருவிழாவிற்கு செல்ல முடியாது.
♦ வெளி வீதியில் சுவாமி வலம் வர அனுமதியில்லை.
♦ தற்போது ஆலய சூழலில் உள்ள வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த, வேறெந்த வர்த்தக நிலையமும் திருவிழாவை முன்னிட்டு ஆலய சூழலில் அமைக்க முடியாது.
♦ அன்னதானம், தாக சாந்திகளிற்கு அனுமதியில்லை.
♦ அர்ச்சகர்கள், உபயகாரர், தொண்டர்கள் தவிர்ந்த வெளியாட்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆலயத்திற்கு நுழையும் 4 வாயில்களிலும் பொலிசார் சாவடி அமைத்து காவல்கடமையில் ஈடுபடுவார்கள். அந்த சாவடியை கடந்து செல்ல பக்தர்கள், காவடிகள், பால்செம்பு, நேர்த்திக்கடனிற்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது. இதனால் பக்தர்கள் காவடியெடுத்து வந்து ஆலயத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பும் அசௌகரிய நிலைமைக்குள்ளாக வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
♦ அர்ச்சகர்கள், ஆலய நிர்வாகத்தினர், தொண்டு செய்பவர்கள், ஆலய சூழலில் உள்ள நிரந்தர கடைகளின் உரிமையாளர்களிற்கு நாளை காலை 9 மணிக்கு வல்வெட்டித்துறை ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பிசிஆர் சோதனையில் கலந்து கொள்பவர்கள் மாத்திரமே திருவிழா சமயத்தில் ஆலய சூழலில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
♦ திருவிழா உபயகாரர்கள் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் சான்றளிக்கப்பட்ட பிசிஆர் எதிர்மறை அறிக்கை வைத்திருந்தால் மாத்திரமே, பொலிசாரின் சாவடியை கடந்து ஆலயத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
♦ அச்சுவேலி ஊடாக செல்வச்சந்நிதி ஆலயத்திற்கான நீர்ப்பாசன திணைக்களத்தின் அருகான கடல்பாலம் இம்முறை திறக்கப்படாது.
♦ விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறாது.
♦ ஆலயத்தில் திருமண நிகழ்வுகள் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டாது.



