கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதை தொடர்ந்து பல மாதங்களாக ஒத்தி வைக்கபட்ட படப்பிடிப்புகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘சீயான் 60’ படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக டார்ஜிலிங் சென்ற ‘சீயான் 60’ படக்குழுவினர் நடுவானில் விமான கோளாறால் சிக்கி தவித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 60 வது படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்த படத்தில் முதன்முறையாக தனது மகன் துருவ்வுடம் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். ஆக்ஷன் திரில்லர் கலந்த படமாக ‘சீயான் 60’ உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாம் அலையால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் ‘சீயான் 60’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக துருவ் விக்ரம் உள்ளிட்ட இதர படக்குழுவினர் கொண்ட சுமார் 60 க்கும் மேற்பட்டோர் தனி விமானம் மூலம் டார்ஜிலிங் கிளம்பினார்கள். அப்போது நடுவானில் விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
இதனால் படக்குழுவினர் மற்றும் பயணிகள் அனைவரும் பதட்டமடைய அதனை தொடர்ந்து விமானி பாதுகாப்பாக சென்னையில் விமானத்தை தரையிறக்கினார். அதனை தொடர்ந்து வேறு விமானம் மூலம் படக்குழுவினர் டார்ஜலிங் சென்றுள்ளனர். தற்போது ‘சீயான் 60’ படப்பிடிப்பு அங்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதே போல் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படமும் விரைவில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் பல கெட்டப்களில் மிரட்டலான நடிப்பை தந்துள்ளார் விக்ரம். இந்த படமும் ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.