தன்னை பலாத்காரம் செய்த மதகுருவை திருமணம் செய்ய அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராபின் வடக்கன் சேரி(40). இவர் கண்ணூரில் உள்ள ஆலயத்தில் பாதிரியாராக இருந்து வந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு ஆலயத்திற்கு பிரார்த்தனைக்கு வந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி அந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்தது.
குழந்தைக்கு காரணம் யார் என அக்கம்பக்கத்தினர் மூலம் தெரிய வந்ததை அடுத்து, ஊர் முழுவதும் தகவல் பரவி பரபரப்பானது. இதையடுத்து போலீசாருக்கு புகார் சென்று, பாதிரியார் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவையடுத்து பாதிரியார் கண்ணூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அங்கே அவர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், பாதிரியார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் சம்மதத்துடன் தான் அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டேன். அவரையே திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறேன். அதனால் எனக்கு ஜாமீன் வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் . இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம் பாதிரியாரின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்து விட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 20 வயதாகிறது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சிறையிலுள்ள பாதிரியாரை தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், குழந்தைக்கு பாடசாலை செல்லும் வயதென்பதால் தந்தையின் பெயரை பதிவு செய்ய கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றும், தானும் அவருக்கு பிறந்த தனது குழந்தையும் அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் பாதிரியாருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல, இந்த பெண்ணை திருமணம் செய்ய தன்னை பிணையில் விடுவிக்க வேண்டுமென பாதிரியார் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இன்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினித் சரண், தினேஷ் மகேஸ்வரி முன் இன்று விசாரணைக்கு வந்தது. மதகுரு சார்பில் வழக்கறிஞர் வினித் ஜார்ஜும், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வழக்கறிஞர் கிரண் சூரியும் ஆஜராகினர்.
மதகுரு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ஜார்ஜ் வாதிடுகையில் “அரசியலமைப்புச் சட்டத்தின்படி திருமணம் செய்ய மனுதாரருக்கு உரிமை இருக்கிறது, அதை தடுக்க முடியாது. மனுதாரரும், மனுதாரரால் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஜாமீன் கேட்டும் கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது” எனத் தெரிவித்தார்
அப்போது நீதிபதிகள் அமர்வு “உங்கள் மனுதாரருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணும் இடையிலான வயது வித்தியாசம் எத்தனை” என்று வழக்கறிஞர் ஜார்ஜிடம் கேட்டனர். அதற்கு வழக்கறிஞர் ஜார்ஜ், “மனுதாருக்கு 49 வயதும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது 25 வயதாகிறது” என்றார்.
அதற்கு நீதிபதிகள் அமர்வு, “ இந்த வழக்கில் ஒவ்வொரு அம்சத்தையும் ஆய்வு செய்தபின்புதான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” எனத் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வழக்கறிஞர் கிரண் சூரி வாதிடுகையில் “ போலீஸார் பாதுகாப்போடு அந்த மதகுருவை அனுப்பி வையுங்கள் அவரோடு திருமணம் செய்து கொள்ள மனுதாரர் ஆர்வமாக உள்ளார்” எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள் அமர்வு “ கேரள உயர் நீதிமன்றத்திடம் சென்று முறையிடுங்கள். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிடாது” என மனுவைத் தள்ளுபடி செய்தனர்.