டயகம சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோஷத்துடன் இன்று (02) காலை பணிக்கு செல்லாது லிந்துலை மட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 9.30 மணிக்கு மட்டுக்கலை தேயிலை தொழிற்சாலை அருகிலிருந்து அட்டன் – நுவரெலியா பிரதான வீதி வரை பேரணியாக சென்று தமது போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
பேரணியில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இறுதியில் மரணித்த ஹிஷாலினிக்கு நீதி கிடைக்கவும் ஆத்ம சாந்திக்காகவும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன.
அத்துடன், வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், பெண்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இதன்போது குரல் எழுப்பட்டது.
–க.கிஷாந்தன்-