பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடிகை கியாரா அத்வானி:
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அப்படத்தை முழுவதுமாக முடிக்காமல், ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கும் பணிகளில் இறங்கினார் ஷங்கர். அத்துடன் இந்தியில் ரன்வீர்சிங் நடிப்பில் அந்நியனை ரீமேக் செய்வதாகவும் அறிவித்தார். இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியன் 2′ படத்தை முடிக்காமல், வேறு படங்களைத் தொடங்கக் கூடாது என இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என்று லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஷங்கருக்குத் தடைவிதிக்க மறுத்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்துள்ள இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்.
தில் ராஜ் தயாரிப்பில் ராம்சரண் நடிப்பில் தனது அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர். . தமிழ், தெலுங்கு, இந்தி என பான் – இந்தியன் திரைப்படமாக இந்த படம் உருவாகிறது. தில் ராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் 50 வது திரைப்படம் இது என்பதால், இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார் தில் ராஜ். இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக நடிக்க ஆலியா பட, கியாரா, அத்வானி, மாளவிகா மோகன் உள்ளிட்டோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே ’வினய விதேய ராமா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஜோடியாக கியாரா அத்வானி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் இயக்குநர் ஷங்கர், ராம்சரண், தில் ராஜு ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது. செப்டம்பர் மாதத்திலிருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். ராம்சரண் நடிக்கும் படத்தை முடித்தவுடன், இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் ‘அந்நியன்’ ரீமேக் படத்தை ஷங்கர் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.