தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் வீட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம், இந்தப் பிள்ளைகளில் 18 சதவீதம் பேர் இளம் வயதிலேயே பாடசாலையிலிருந்து இடைவிலகுவதுதான் என்று மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்தார்.
18 வயதிற்கும் குறைவான மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகும் தேசிய விகிதம் 6 சதவீதமாக இருந்தாலும், மலையக பாடசாலை மாணவர்களின் வீதம் சராசரி விகிதத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும் என குறிப்பிட்டார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆளுநர் இதனை தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வீட்டுப் பணியாளரான சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து பொறுப்பான துறைகளின் கவனம் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தியுள்ளது. கொழும்பு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள தோட்டங்களில் இருந்து ஏராளமான குழந்தைகள் தரகர்களால் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறி வேலைக்கு செல்வதை ஊக்குவிக்கும் தரப்புக்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற மற்றொரு சம்பவம் நடக்கும் வரை காத்திருக்காமல், பொறுப்பான துறைகள் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசந்த யப்பா பண்டார, எம்.ஹலீம், குணதிலக ராஜபக்ஷ, ரஞ்சித் பண்டார, மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரத்ன, மாவட்ட மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.