உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல இரத்தினக்கல் கொத்து ஒன்று இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு வருடத்தின் முன் மீட்கப்பட்ட இரத்தினக்கல் பற்றிய விபரம் நேற்று (27) பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தது.
இலங்கையிலும், சர்வதேச அளவிலும் இது முக்கிய செய்தியாக இடம்பெற்றிருந்தது.
இந்த இரத்தினக்கல் தொடர்பான மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ள.
இரத்னபுரி, கஹவத்தையில் உள்ள பெல்மடுல்ல பகுதியில் வசிக்கும் கமகே என்ற தொழிலதிபரிற்கு சொந்தமான நிலத்தில் இந்த இரத்தினக் கல் கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பெயர் முதலில் வெளியிடப்படவில்லை.
அவர் தனது நிலத்தில் இயந்திரம் மூலம் கிணற்றைத் தோண்டியபோது இரத்தினக் கல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இரத்தினக்கல் வர்த்தகர் என்பதால், அந்த கல்லை இலகுவாக அடையாளம் கண்டறிந்தார்.
இந்த கல்லை விற்பனை செய்வதற்கான முயற்சியில் இறங்கிய போது, அதன் உயர் மதிப்பு காரணமாக, சரியான விலை மதிப்பீட்டைப் பெறுவது கடினமாக இருந்ததால், தேசிய மாணிக்கம் மற்றும் நகை அதிகாரசபையின் ஆலோசனை மற்றும் உதவியின் அடிப்படையில் விற்பனை முயற்சியை தொடங்கினார்.
அதிகாரசபையின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கல் இப்போது இலங்கை வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளது.
இந்தகல் சில காலத்தின் முன் ஆய்வு செய்யப்பட்டபோது, உரிமையாளரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்று சர்வதேச ஊடகங்களுக்கு நேற்று வெளியிடப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள முக்கிய ஊடகங்கள் இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டொலர்கள் (2,000 கோடி இலங்கை ரூபாய்) வரை மதிப்பிடப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுமார் 510 கிலோகிராம் அல்லது 2.5 மில்லியன் கரட் எடையைக் கொண்டுள்ளது.
450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாறைகளிலிருந்து உருவான படிகம், குருந்தம் இணைந்து உருவாகியுள்ளதாக சர்வதேச மாணிக்கக்கல் நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.
இலங்கையின் நீல இரத்தினக்கல் உலகளவில் பிரசித்தி பெற்றது. பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேட் மிடில்டன் இலங்கையில் உருவாக நீல இரத்தினக்கல் பொறிக்கப்பட்ட மோதிரத்தை அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.




