மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மக்கள் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும்,வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாகவும் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது குறித்த தீர்மானம் முன் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார்,மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார், சுகாதார திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள்,பொலிஸ், இராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது எதிர் வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம் பெற உள்ள மடு திருவிழா தொடர்பாகவும் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சுகாதார துறையினரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.மேலும் உரிய திணைக்களங்களின் உதவியோடு,மடு திருத்தலத்திற்கு வரும் மக்களின் தேவைகள் குறித்து ஆராயப்பட்டது.
குறிப்பாக நீர்,சுகாதாரம்,மருத்துவம்,போக்குவரத்து போன்ற தேவைகளை உரிய திணைக்களங்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சுகாதார செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அடுத்த கூட்டங்களில் தீர்மானங்களை முன்வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழி முறைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவில் கலந்து கொள்ள முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிகமான திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.