தனது மகளிற்கு பிரசவமானால் குழந்தை அல்லது மகள் உயிரிழப்பார்கள் என ஜோதிடர் கணித்ததையடுத்து, மகளை கடத்திச் சென்று பலவந்தமாக கருக்கலைப்பு செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான கர்ப்பிணி மகளை கடத்திச் சென்று 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு கருக்கலைப்பு செய்யப்பட்டது.
கிரிபத்கொட பொலிசார் கடந்த 23ஆம் திகதி தாயாரை கைது செய்தனர்.
கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் உள்ள ஹுனுபிட்டி நஹேன பகுதியில் வசிக்கும் அந்த பெண்ணின் மகள் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
பெண்ணின் தாயார் முதலில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. மகள் விடாப்பிடியாக நின்றதையடுத்து, ஜோதிடரை சந்தித்து மகளின் எதிர்காலம் குறித்து வினவியுள்ளார்.
24 வயதும் 10 மாதங்களும் முடிவதற்கு முன் அந்த யுவதி கருத்தரிக்கக் கூடாது என்றும், மீறி கருத்தரித்தால் தாய் அல்லது சேய் உயிரிழப்பார்கள் என்றும் சோதிடர் குறிப்பிட்டுள்ளார்.
மகளின் விடாப்பிடியினால் திருமணம் செய்து கொடுத்தாலும், அவர் கர்ப்பம் தரித்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார். அண்மையில் தாயார் கொஞ்சம் அசந்த கப்பிற்குள், கணவன் கடா வெட்டி விட்டார். அந்தப் பெண் கர்ப்பவதியாகி விட்டார்.
இதையடுத்து, மகளின் கர்ப்பத்தை அழிக்க திட்டமிட்ட தாயார், கடந்த 15ஆம் திகதி வீட்டில் மருமகன் இல்லாத சமயத்தில், மேலும் இருவரின் துணையுடன் வாகனமொன்றில் மகளை கடத்திச் சென்றார்.
கேகாலை பகுதியிலுள்ள வீடொன்றில் 5 நாட்கள் தங்க வைத்து கருக்கலைப்பு செய்யப்பட்டது. வலுக்கட்டாயமாக அவருக்கு ஊசி செலுத்தப்பட்டதுடன், வலுக்கட்டாயமாக 4 மாத்திரைகள் அவரது பெண்ணுறுப்பிற்குள் செலுத்தப்பட்டது.
அந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்ற பெண், கணவனை அழைத்து விடயத்தை தெரிவித்ததையடுத்து, அவர் கேகாலை சென்று மனைவியை மீட்டார். பின்னர் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அந்த முறைப்பாடு கிரிபத்கொட பொலிசாருக்கு மாற்றப்பட்டதையடுத்து, 23ஆம் திகதி தாயார் கைது செய்யப்பட்டார்.
கைதான பெண் ஒரு அரச உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.