கிளிநொச்சி – அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றை அண்மித்த 400 ஏக்கர் பகுதியில் புதிதாக இரண்டு குளங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான ஆரம்ப நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், ரூபா 20 மில்லியன் செலவில் இந்த இரு குளங்களும் அமைக்கப்படவுள்ளன. சுமார் 300 அடி நீளமும், 180 அடி அகலமும், 10 அடி ஆழமுங் கொண்டனவாக இந்த இரு குளங்களும் அமைக்கப்படவுள்ளன.
இதன் ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், அறிவியல் நகரில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம் மற்றும் தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றின் பீடாதிபதிகள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா குளம் வெட்டும் பணிகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
விவசாய பீடம் மற்றும் தொழில் நுட்ப பீடம் பகுதிகளில் அமைந்துள்ள பண்ணைகளுக்கான நீர்த் தேவைக்கு இந்த இரு குளங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.