அழகான பெண்களின் படங்களை பதிவிட்டு, அவர்களின் தொடர்பிலக்கமென முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தொலைபேசி இலக்கத்தை இணைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது, ஹிருணிகா இதனை வெளிப்படுத்தினார்.
பேஸ்புக் வழியாக தரவிறக்கம் செய்யப்பட்ட அழகிய யுவதிகளின் படங்களை வலைத்தளம் ஒன்றில் தவறாக பயன்படுத்தி, அவர்களை தொடர்பு கொள்ளலாமென இணைக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களில் ஒன்று, தன்னுடையதென்பதை வெளிப்படுத்தினார்.
அந்த இலக்கத்தை பார்த்து, தனது இலக்கத்திற்கு இளைஞன் ஒருவர் அழைப்பேற்படுத்திய போதே அதை அறிந்து கொண்டதாக தெரிவித்தார்.
தொடர்பு கொண்ட பின்னரே தன்னை அவர் அடையாளம் கண்டு கொண்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோரியதுடன், பொலிசில் முறையிட வேண்டாமென இளைஞன் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
கொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவின் விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு குறித்தும் தெளிவுபடுத்தினார்.
துமிந்தா சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மன்னிப்பு வழங்கிய நடைமுறையை மட்டுமே அவர் கண்டுபிடிக்க விரும்பியதாக கூறினார்.
“துமிந்த சில்வாவுடன் எனக்கு ஒரு வெறுப்பு இருந்தது, ஆனால் நான் ஒரு தாயான பிறகு அதை விட்டுவிட்டேன். அவர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவரது தாயார் என்ன உணர்ந்திருப்பார் என்று நான் நினைத்தேன். மேலும், அவருடன் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு ஏன் மன்னிப்பு வழங்கப்படவில்லை என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், இது ஒரு மோசமான முன்மாதிரியாகும், ஏனெனில் எந்தவொரு சக்திவாய்ந்த நபரும் ஜனாதிபதி மன்னிப்பைப் பெற முடியும் என்பதால் ஒருவரைக் கொன்றுவிட்டு தப்பிப்பிழைக்க முடியும் என்று நினைப்பார்கள், ”என்று அவர் கூறினார்.