25.3 C
Jaffna
January 25, 2025
Pagetamil
இலங்கை

சாவகச்சேரி இளைஞர்களின் பொறியில் சிக்கிய மோசடி முகவர்கள்; இரகசிய இடத்தில் தடுத்து வைப்பு… நிறுத்தாத தொலைபேசி அழைப்பு: நள்ளிரவில் நடந்த சினிமாவை மிஞ்சிய கடத்தல்!

யாழ் மாவட்டம் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற இளைஞர்களை ஏமாற்றிய முகவர்களை பொறி வைத்து பிடித்துள்ளனர் இளைஞர்கள்.

நேற்று இரவு நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தில், கொழும்பிலிருந்து வந்த முகவர்கள் உள்ளிட்ட மூவரை, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தடுத்து வைத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்ற போது, இளைஞர்கள் தப்பிச் சென்று விட்டனர். ஆட்களை அனுப்பும் முகவர்கள் மூவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் விடுதி நடத்தும் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தென்மராட்சி பிரதேசத்தில் மட்டும் இவர்களிடம் சிக்கி 20 இற்கும் அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தரப்பில் தமிழ்பக்கத்திடம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின்படி-

மிக நூதனமாக செயற்படும் இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் 1 இலட்சம் ரூபாவை முதலில் பெற்றுள்ளனர். வெளிநாட்டுக்கு செல்ல முயல்பவர்களிடம், பணத்தை வங்கி மூலம் அல்லாமல் நேரடியாகபெறும் அவர்கள், தமது வாகனத்தில் வீடுகளிற்கு நேரில் சென்று பணத்தை பெற்று, வெளிநாடு செல்லவுள்ளவரையும் ஏற்றிச் சென்று விடுவார்கள்.

கொழும்பிலுள்ள தமது விடுதியில் சுமார் இரண்டு மாதங்கள் தங்க வைத்திருப்பார்கள். இதற்கான செலவையும் குறிப்பிட்ட இளைஞன் செலுத்த வேண்டும். இந்த காலப்பகுதியில் அவர்கள் விடுதியிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பின்னர் அவர் ருமேனியாவிற்கு அனுப்பப்படுவார். அத்துடன், முகவர்கள் தொடர்பை துண்டித்து விடுவார்கள். பின்னர் அந்த இளைஞர் அங்கிருந்து நாடு கடத்தப்படுவார்.

சாவகச்சேரியை அண்மித்த பகுதியிலுள்ள இளைஞன் ஒருவர் உணவகம் நடத்தியுள்ளார். பின்னர், அதை விட்டுவிட்டு வெளிநாடு செல்ல முயன்றார்.

கொழும்பை சேர்ந்த அந்த இரண்டு முகவர்களிடமும் அவர் சுமார் 6 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்துள்ளார். எனினும், பணத்தை நேரடியாக கொடுத்ததால் ஆவணங்கள் இருக்கவில்லை. எனினும், தொலைபேசி உரையாடல் பதிவுகளை வைத்திருந்தார்.

வெளிநாடு செல்ல முயன்று, ருமேனியாவுடன் அந்த இளைஞனும் திரும்பி வந்தார்.

வாங்கிய பணத்தை முகவர்கள் திருப்பிக் கொடுக்க மறுத்து விட்டனர்.

ஓரிரு தினங்களின் முன்னர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற இளைஞன், சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ய முயன்ற போதும், போதிய ஆதாரங்களில்லாததால் முறைப்பாட்டை பொலிசார் பெற்றுக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது.

இதையடுத்து, இரண்டு மோசடி பேர் வழிகளையும் பொறி வைத்து பிடிக்க அந்த இளைஞன் திட்டமிட்டார்.

கொழும்பு முகவர்களிற்கு முகவராக வரணியை சேர்ந்த முதியவர் ஒருவர் செயற்பட்டுள்ளார்.

தென்மராட்சியில் 5 இளைஞர்கள் வெளிநாடு செல்லவிரும்புவதாக அந்த முதியவரை இளைஞர்கள் அணுகியுள்ளனர். வரணி முதியவர், கொழும்பு முகவர்களிற்கு தகவல் கொடுக்க “அப்படியா… நல்லது டிரெக்டாக பிரான்ஸ் அனுப்பி வைக்கலாம்“ என உற்சாகமாக வாக்களித்து, பிரான்ஸ் செல்ல தயாராக இருக்குமாறும், நேற்று (22) மாலை 6 மணிக்கு ஏற்ற வருவதாகவும் கொழும்பு முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 6 மணிக்கு கொழும்பு முகவர்கள் தமது வாகனத்தில் வந்துள்ளனர். அவர்களுடன் வரணி முகவரும் இருந்தார்.

இளைஞன் ஒருவர் வாகனத்தில் ஏறி, மற்றொருவரை ஏற்றுவதாக கூறி, வரணியில் ஆட்களற்ற வீடொன்றிற்கு அழைத்து சென்றார்.

இன்னொரு ஒரு இலட்சம் ரூபா மாட்டிய சந்தோசத்தில் சென்ற முகவர்களை அங்கிருந்த இளைஞர்கள் மடக்கிப் பிடித்து வீட்டில் தடுத்து வைத்தனர். தன்னிடம் பெற்ற 6 இலட்சம் ரூபா பணத்தை மீள ஒப்படைக்குமாறு பாதிக்கப்பட்ட இளைஞன் கேட்டுள்ளார். முகவர் பணமில்லையென கூற, 3 இலட்சம் ரூபா பணம் கொடுத்தால் விடுவிக்கலாமென இளைஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, முகவர்கள் முறையாக கவனிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

முகவர்கள் தம்மிடமிருந்த பணமென 199,000 ரூபா பணத்தை உடனடியாக இளைஞர்களின் கணக்கில் வைப்பிலிட்டுள்ளனர். அத்துடன், யாரிடமாவது ஒரு இலட்சம் ரூபாவை பெற்றுத்தருமாறும், கொழும்பு சென்று திருப்பி தருவதாகவும் வரணி முகவரிடம் கேட்டுள்ளனர்.

இதையடுத்து, வரணி முகவர் தனது உறவினர் ஒருவரை கைத்தொலைபேசியில் அழைத்து, அவரசமாக ஒரு இலட்சம் ரூபா தேவையென்ற தகவலை கொடுத்தார். இந்த தகவலை தெரிவித்து விட்டு, தனது கைத்தொலைபேசியில் அழைப்பை துண்டிக்காமல் வைத்திருந்துள்ளார்.

அவர் பேசி முடிந்ததும், இளைஞர்கள் முகவர்களை மிரட்டியுள்ளனர். கைத்தொலைபேசி துண்டிக்கப்படாததால், மறு முனையிலிருந்த உறவினர் அதை அவதானித்து, உடனடியாக கொடிகாமம் பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

நேற்று இரவு11 மணியளவில் முகவரின் உறவுக்காரர் பணத்தை கொண்டு வருவதாக தெரிவித்தார். அவருடன், கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சிலரும் சென்றனர்.

பொலிசார் நெருங்குவதை எப்படியோ அறிந்த இளைஞர்கள் வீட்டிலிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த முகவர்கள் மூன்று பேரும் பொலிசாரினால் மீட்கப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞர்களிடம் பணத்தை பெற்றதாக ஒப்புக் கொண்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக 5 இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

ஆட்கடத்தல், பண மோசடிஉள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட முகவர்கள், நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

What’s your Reaction?
+1
2
+1
3
+1
1
+1
2
+1
3
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

east tamil

இந்திய மீனவர் அத்துமீறல்: எதிர்க்கட்சி தமிழ், முஸ்லிம் எம்.பிகளை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள்!

Pagetamil

பாராளுமன்றத்தில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

east tamil

கைதிகள் நலனுக்காக யாழ். சிறையில் கணினி மையம்

east tamil

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

east tamil

Leave a Comment