29.8 C
Jaffna
April 20, 2024
கட்டுரை முக்கியச் செய்திகள்

மத்திய அரசின் கீழ் செல்லும் மாவட்ட வைத்தியசாலைகள்: பின்னணியும், விளைவுகளும்!

♦மு.தமிழ்ச்செல்வன்

கடந்த மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அதாவது 13வது அரசியலமைப்பின் படி மாகாணங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒன்பது மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வரும் யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இந்த யோசனையை முன் வைத்த போது அதற்கான நியாயப்படுத்தல் பின்வருமாறு இருந்தது.

இலங்கையில் தேசிய மருத்துவமனைகளில் காணப்படும் மருத்துவ சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சை மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கு சமமான வசதிகளை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனை ஒன்றை மேம்படுத்துவதற்கு அரசாங்கம்; திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, தற்போது மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படுவதும் மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் நிறுவன வகைப்படுத்தலின் கீழ் காணப்படும் மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிஸ்ஸாவெல, கம்பஹா, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளின் சேவை வழங்கலின் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதிகரிப்பதற்காகவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது பொருத்தமென இனங்காணப்பட்டுள்ளது. என கூறப்பட்டிருந்தது.

இதுவே பின்னாளில் அரசியல் ரீதியாக பல வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தன. தமிழ் மக்கள் தரப்பில் பெரும்பாலானவர்கள் அரசின் இந்த யோசனையை கடுமையாக எதிர்த்தார்கள். 13 வது அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்ட காணி பொலீஸ் அதிகாரங்கள் அன்று தொடக்கம் இன்றுவரை மாகாணங்களுக்கு வழங்கப்படவில்லை அத்தோடு காலத்திற்கு காலம் இவ்வரசியலமைப்புக்கு மாறாக சுற்றுநிருபங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தேசிய பாடசாலைகள் என மாகாண அதிகாரங்களுக்கு கீழ் உள்ள பாடசாலைகளை பலவற்றை மத்திய அரசின் கீழ் கொண்டு சென்றமை போன்ற பிரச்சினைகள் உள்ள போது மாவட்ட வைத்தியசாலைகளையும் கொண்டு செல்ல என்பது இந்த அரசியலமைப்புச் சட்டம் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எஞ்சிய அதிகாரங்களையும் பிடுங்கிகொள்வதற்கு ஒப்பானது.

மாகாணசபை உருவாகும்போது, அதிகாரப் பகிர்வினை எதிர்பார்த்திராத மாகாணங்களுக்கும் அந்த அதிகாரப் பகிர்வை வழங்கியமை. பசியுடன் இருந்தவர் உணவு கேட்டபோது பசி இல்லாதவர்களுக்கும் உணவுப் பொதி வழங்கியமைக்கு ஒப்பாகும். பசி இல்லாதவர்கள் கொடுத்தவர் திரும்ப கேட்டால் தயக்கம் இன்றி திரும்ப கொடுப்பார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தான் பசி இல்லையே. அதுபோலவே வடக்கு கிழக்கிற்கு வழங்கவேண்டிய மாகாண முறைமையை நாடுமுழுவதும் கொடுத்தாலும் அந்த அதிகாரத்தை பிரித்து எடுக்கும்போது பிற மாகாணங்கள் மனம் உவந்து கொடுக்கும். ஆனால் வடக்கு கிழக்கின் நிலை அது அல்ல.

எனவே அரசின் யோசனைப்படி மாவட்ட வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்பட்டால் அதனால் பல்வேறு சிக்கல் நிறைந்த நிலைமையே ஏற்படும்.

வளங்கள் குறைந்த பிரதேசங்களில் காணப்படும் அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து மக்களுக்கு சுகாதார சேவைகளைத் தடையின்றி கொண்டுசெல்ல மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கீழ் இயங்குவதே உதவியாக இருந்துள்ளது. இடம்பெயர்கள், யுத்த சூழல்கள், மீள்குடியேற்றங்கள், இயற்கை அனர்த்தங்கள், பாரிய நோய்த்தொற்றுப் பரவல்கள் ஆகிய காலப்பகுதியில் மாவட்டத்தின் அனைத்து சுகாதாரத்துறையினரும் ஒரே அணியாக சகல வளங்களையும் ஒருங்கிணைத்து மக்களது சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இது கடந்த காலத்தில் வடக்கின் அனுபவம் ஆனால் அரசின் யோசனைப்படி மாவட்ட வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்பட்டால் அங்கிருந்து ஒரு பிரதேச வைத்தியசாலைக்கு சாதாரண ஒரு சிற்றூழியரைக் கூட நெருக்கடியான சூழலில் மாற்றி மக்களுக்கான பணியை வழங்க முடியாது நிலைமை ஏற்படும்.

உதாரணமாக கிளிநொச்சியில் கண்டாவளையிலும், முட்கொம்பனிலும், உழவனூரிலும் என மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எல்லாம் நீந்திச் சென்று கிளிநொச்சி பொது வைத்தியசாலை வைத்தியர்கள், மருந்தாளர்கள் மற்றும் பணிக்குழாத்தினர் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்களுக்கு மருத்துவசேவை வழங்கினர். கிளிநொச்சியில் பன்றிக்காய்ச்சலும் டெங்குநோயும் ஒன்றாக மக்களை வருத்த முற்பட்டபோது மாவட்டத்தின் அனைத்து சுகாதார வளங்களும் மாவட்டப்பொது வைத்தியசாலையில் குவிக்கப்பட்டு மக்கள் காப்பாற்றப்பட்டனர்.

கிளிநொச்சி வைத்தியசாலை பிராந்திய வைத்தியசாலைகள் என்ற பாகுபாடு இருக்கவில்லை. மாவட்டப்பொது வைத்தியசாலையின் உயிர்நுட்பப் பகுதியே மாவட்டம் முழுமையையும் கண்காணித்தது. இதனால் சுகாதாரத்துறை ஒரு குடும்பம் போல இயங்கி மக்களை காத்தது.

வேரவில் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டில் இயங்க மறுத்தபோது கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து சென்ற உயிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் அதனை இயங்கு நிலைக்கு கொண்டுவந்தனர்.

ஆனால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் சென்றால் மேற்படி ஒருங்கிணைந்த சேவையினை வழங்க முடியாது போய்விடும்.

மாகாண சபைகள் இலங்கையில் அறிமுகமாகிய காலந்தொட்டு அதிகாரப் பரவலாக்கத்தின் ஒரு அங்கமாக நிதி ஒதுக்கீடுகளை பரவலாக்குவது சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

மாகாண சபைகளின் உருவாக்கத்தின் முன்னர் நாட்டில் உள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரத் கட்டமைப்புகளும் மத்திய சுகாதார அமைச்சினாலேயே நிர்வகிக்கப்பட்டன. அதற்கான சகல நிதி வாக்குத் தலைப்புகளும் (Voteheads) மத்திய சுகாதார அமைச்சிற்கே வழங்கப்பட்டிருந்தன. மாகாண சபைகள் உருவாகி விசேட வைத்தியசாலைகள் மற்றும் போதனா வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதாரக் கட்டமைப்புகளும் மாகாண சபைகளின் கீழ் சென்ற பின்னரும் மத்திய அரசு பெற்றுவந்த நிதி வாக்குத் தலைப்புகளில் மாற்றம் இல்லாமல் அதே வகையில் நிதி ஒதுக்கீடுகள் நடந்து வருகின்றன.

இதனால் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வருடாந்தம் அறுபது வீதம் அளவே செலவு செய்யப்பட, மாகாணங்கள் சுகாதாரக் கட்டமைப்புகளைப் பராமரிக்க திணறிக்கொண்டிருந்தன. இதனை நிதிச் சேவைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்று சுகாதாரக்கட்டமைப்பிற்கான நிதி வழங்களை சரியான வகையில் பகிர்வு செய்வதனை மாகாணங்களில் இருந்த எவரும் செய்யவில்லை என்ற ஒரு கருத்தும் பலமாக இருக்கிறது.

அதாவது மாகாணங்களும் நிதிச்சேவை ஆணைக்குழுவின் ஊடாக சுகாதாரக் கட்டமைப்புகளை நிர்வகிப்பதற்காக விசேட மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியினைப் பெற முயலவில்லை. மாறாக பொதுவான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்தே சுகாதாரக் கட்டமைப்பிற்கு நிதி ஒதுக்கிடப்பட்டது.

இதனை அடுத்து மத்திய சுகாதார அமைச்சானது மாகாணங்களின் கீழ் வரும் வைத்தியசாலைகளுக்கு தமது நிதி ஒதுக்கீடுகளின் ஊடாக நிதி வழங்கலை மேற்கொண்டு வரத் தொடங்கியது. மத்திய சுகாதார அமைச்சிடமிருந்து மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் அல்லது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கணக்கின் ஊடாக நிதி வழங்கப்படுவது ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையாக இருந்துவந்தது. இது வடக்கிற்கு மட்டுமல்ல ஒன்பது மாகாணங்களுக்கும் பொதுவாக நடந்து வந்தது.

வடக்கின் இறுதியாக இருந்த பிரதம செயலாளர் அதிகாரத்திற்கு வந்த காலத்திலிருந்து அப்போதிருந்த முதலமைச்சர் உள்ளிட்டோரை தனது வழிகாட்டலுக்கு ஆட்படுத்தி “மத்திய சுகாதார அமைச்சு நேரடியாக நிதி ஒதுக்கீடுகளை மாகாணத்திற்கு அல்லது மாவட்டங்களுக்கு வழங்க முடியாது. அவ்வாறு வழங்குவதானால் அவர்கள் வடக்கின் திறைசேரி ஊடாக வழங்கட்டும்” என்ற கொள்கை முடிவினை முன்னெடுக்க ஆரம்பித்தார்.

2017 ஆண்டில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மத்திய சுகாதார அமைச்சினால் 100 மில்லியன் ரூபாக்கள் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டபோது, அதனைச் செயற்படுத்துவதற்கு வடமாகாண கட்டடங்கள் திணைக்களம் மற்றும் சுகாதாரத் திணைக்களத்திற்கு பிரதம செயலர் அனுமதி வழங்கவில்லை.

இதனையடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேரடியாக வடக்கிற்கு வந்து அப்போதைய வடமாகாண முதலமைச்சருக்கு நிலைமைகளை விளங்க வைத்து, மத்திய சுகாதார அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை மாகாண திறைசேரி ஊடாக வழங்குவதற்கு நிதிவிதிகளில் இடமில்லை என்பதைப் புரியவைத்த பின்னரே அந்த நிதி பயன்படுத்தப்படுவதற்கான தடை நீங்கியிருந்தது.

அதுமட்டுமல்ல கொழும்பில் நிதி அமைச்சு மற்றும் நிதிச் சேவைகள் ஆணைக்குழு ஆகிய தேசிய மட்ட அமைப்புகளில் “மத்திய சுகாதார அமைச்சு அனாவசியமாக வடக்கின் சுகாதாரத்துறையில் தலையிடுகிறது. அவர்கள் நேரடியாக நிதி வழங்குவது பதின்மூன்றாவது திருத்தத்திற்கு சவாலானது” என்ற கருத்தைப் வடக்கின் உயரதிகாரிகள் கூறி வந்தனர்

இவ்வாறு வடக்குப் பிரதம செயலாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கடும் வாதங்களின் விளைவாக 2017 ஆம் ஆண்டின்போது நாடெங்கும் உள்ள மாகாணங்களின் ஆளுகைக்கு உட்பட்ட வைத்தியசாலைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து பல கணக்காய்வு வினாக்கள் மத்திய சுகாதார அமைச்சிற்கு எதிராக எழுப்பப்பட்டன. இதனை அடுத்து மத்திய சுகாதார அமைச்சானது மகாணங்களின் அதிகாரங்களுககு உட்பட்டுள்ள வைத்தியசாலைகளுக்கு எவ்வித நிதி ஒதுக்கீடுகளையும் இனிமேல் மேற்கொள்வதில்லை என்ற கொள்கை முடிவினை எடுத்து 2018 ஆம் ஆண்டிலிருந்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இவ்வாறு வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மத்திய சுகாதார அமைச்சிடம் இருந்து வரும் நேரடி நிதி ஒதுக்கீடுகளை தடுத்த வடக்கின் உயரதிகாரிகள் அதற்குப் பதிலீடான நிதியை நிதிச் சேவைகள் ஆணைக்குழுவிடமிருந்து கேட்டுப் பெற்று வடமாகாண வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதனையும் செய்யவில்லை.

இதனால்தான் தற்போது மத்திய சுகாதார அமைச்சு “மாகாண வைத்தியசாலைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் போதாமையால் அவை அபிவிருத்தி செய்யப்படவில்லை. அதனால் அவற்றில் பிரதான வைத்தியசாலைகளான மாவட்ட பொது வைத்தியசாலைகளை கையேற்கப்போகிறோம்” என அமைச்சரவைக்கு நியாயப்படுத்த முடிந்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் ‘பட்டாடைக் கனவில் கட்டியிருந்த கோவணம் களவு போவதற்கு’ இவ் உயரதிகாரிகள் காரணமானார்கள் என விடயமறிந்த பலரும் பேசத் தொடங்கினார்கள்.

அபிவிருத்திக்கும் எந்த அமைச்சின் கீழ் அந்த வைத்தியசாலை வருகிறது என்பதற்கும் சம்பந்தம் இருந்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதற்குப் பின்னர் மத்திய அரசின் கீழ் உள்வாங்கப்பட்ட காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையைக் காட்டிலும் பௌதீக மற்றும் ஆளணியில் பின்தங்கியிருப்பது ஏன் என பலர் கேள்வி எழுப்புகின்றனர். இடிந்து விழும் அபாயத்திலிருந்த மகப்பேற்றுப்பிரிவு இடித்து அகற்றப்பட்டடு ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை ஒரு மகப்பேற்று விடுதிக் கட்டடத்தைக்கூட கட்டியெழுப்ப முடியாத நிலையில் மகப்பேற்றுக்கு செல்லும் தாய்மார்கள் அவலத்திற்குள் தள்ளப்பட்ட நிலை யாழ் போதனாவைத்தியசாலையில் காணப்படுகிறது.

ஆனால் மாகாணசபையின் ஆளுகைக்குள் இருக்கும் மாவட்டப் பொது வைத்தியசாலையில் மாகாண சுகாதார அமைச்சராக இருந்த சத்தியலிங்கம் அவர்களது முன்முயற்சியால் நெதர்லாந்து அரசானது மத்திய சுகாதார அமைச்சின் ஊடாக வடமாகணத்திற்குரிய விசேட மகப்பேற்று பெண்ணோயியல் பிரிவினை பிரமாண்டமாக கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது.

எனவே கட்டடங்கள் கட்டப்படுவதற்கும் மாகாண அரசுக்கும் சம்பந்தமில்லை. அது உரிய அதிகாரிகளது செயலூக்கத்திலேயே தங்கியுள்ளது.

அண்மையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அபிவிருத்தி எதுவும் பலவருடகாலமாக செய்யப்படவில்லை என அந்த வைத்தியசாலையின் வைத்தியர் சங்கத்தினர் குற்றம் சுமத்தியிருந்தனர். இவ் வைத்தியசாலை மத்திய அரசின் ஆளுகையின் கீழ் உள் வைத்தியசாலையாகும்.

வடக்கில் உள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதாரக் கட்டமைப்பானது கடந்த முப்பது வருடகால யுத்த சூழ்நிலையால் நேரடியான மற்றும் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டனையாகும். குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பொது வைத்தியசாலைகள் அவை முழுமையாக நிர்மாணிக்கப்படுவதற்கு முன்பாகவே யுத்த சூழ்நிலையால் அரைகுறையான நிலையில் இயங்க வேண்டிய நிலை இருந்தது. இடப்பெயர்வின்போது இந்த இரு வைத்தியசாலைகளது கட்டடங்களைத் தவிர ஏனைய அனைத்து பௌதீக வளங்களும் சிதைந்து போயிருந்தன. மீள்குடியேற்றத்தின் பின்னர் இந்த இரண்டு வைத்தியசாலைகளையும் மீள பழைய இயங்கு நிலைக்கு கொண்டுவருவதற்கே பலகோடி ரூபாக்கள் செலவிடப்பட்டன.

இவை தவிர மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைகளும் யுத்த சூழ்நிலையால் ஏற்பட்ட தடைகளைத் தாண்டியே இயங்க வேண்டி இருந்தன.

இவ்வாறான நிலையில் 2009 ஆம் ஆண்டின் பின்னர் சிதைவுகளிலிருந்து கட்டி எழுப்பப்படும் வைத்தியசாலைகளையும் நாட்டின் பிற பகுதிகளில் நீண்டகால அபிவிருத்தி காரணமாக வளத்துடன் காணப்படும் வைத்தியசாலைகளையும் ஒப்பிட்டு வடக்கு வைத்தியசாலைகள் மாகாண சபைகளின் கீழ் இருந்ததால்தான் வளரவில்லை என்று கூறுவது பொருத்தமான காரணமல்ல

அதிகாரப் பராவலாக்கத்திற்கு அரசியல் முகம் தவிர பொதுமக்களுக்கு இலகுவில் சேவைகளை வழங்குதல் என்றதொரு முகமும் உண்டு.

உதாரணமாக மத்திய சுகாதார அமைச்சின் கீழ் உள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சில குடும்ப நல மாதுக்களும், கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின்கீழ் பணியாற்றும் சில குடும்ப நல மாதுக்களும் ஒரே காலப்பகுதியில் சேவையில் இணைந்தவர்களாக இருந்தும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றுவோருக்கான தரநிலை உயர்வுகள் உரிய காலத்திற்குள் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை. காரணம் கிழக்கு மாகாண சபைக்குட்டபட்ட அலுவர்களுக்கான தரநிலை உயர்வுகள் கிழக்கிலேயே செய்யப்பட்டதால் உரிய காலத்தில் அவை செய்யப்பட்டுவிட்டன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கிழக்கில் இருப்பினும் அவர்களது பெயர்வழிக் கோவைகள் கொழும்பில் இருப்பதால் தொடர் அவதானம் செலுத்தமுடியாத பின்னூட்டங்களைப் பெற முடியாத நிலை, மொழிச் சிக்கல் எனப் பல்வேறு பாதகமான காரணிகளால் உரியகாலத்தில் தரநிலை உயர்வுகள் செய்யப்பட்டிருக்கவில்லை.

எனவே அபிவிருத்தியை காரணம் காட்டி மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கை என்பது நாட்டின் இனப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக பேசப்படும் அதிகார பரவாலாக்கலுக்கு எதிரானதாகவே இருக்கும். மாகாண சபைகளுக்கு என அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பினும் அவையும் நாட்டின் மத்திய அரசின் கீழ் உள்ள ஒரு கட்டமைப்பே எனவே அவற்றுக்கு அதிக வளங்களை ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி செய்வதற்கு அதனை தங்களது அதிகாரத்திற்கு கீழ் கொண்டு சென்றே மேற்கொள்ள வேண்டும் என்பது பொருத்தமற்ற நியாயப்பாடு. முத்திய அரசு மாகாணங்களுக்கு கீழ் வருகின்ற மாவட்ட வைத்தியசாலைகளுக்கு விசேட நிதி ஒதுக்கடாக நேரடியாகவும் ஒதுக்கீடுகளை மேற்கொள்ள முடியும் அல்லது மாகாண திறைசேரிக்கு ஊடாகவும் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு அபிவிருத்தி செய்ய முடியும் அதில் பாரியளவு தடை இருப்பதாக இல்லை. கடந்த காலத்தில் அவ்வாறு இடம்பெற்றிருக்கிறது. எனவே இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக

அரசின் யோசனை நிறைவேறினால் மாவட்ட வைத்தியசாலைகள் அந்தந்த மாவட்டங்களில் ஒரு ஏரிஎம் இயந்திரம் போன்றே மக்களுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனமாக காணப்படுமே தவிர ஒரு ஒருங்கிணைந்த வினைத்திறனான மக்களுக்கான முழுமையான சேவையினை வழங்க முடியாது போய்விடும்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஈரானுக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்!

Pagetamil

திருகோணமலையையும், கிழக்கையும் தமிழர்கள் இழந்தது சம்பந்தனின் அரசியலாலேயே: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி

Pagetamil

இஸ்ரேலுக்குள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: பதிலடியை ஆரம்பித்தது ஈரான்!

Pagetamil

தமிழ் பொதுவேட்பாளர்: தென்னிலங்கை சக்திகளின் சதியா?

Pagetamil

Leave a Comment