முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீப்பற்றி உயிரிழந்த சிறுமி நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 16 வயதான சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக, கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜெயசூரியவிடம் பொரளை பொலிசார் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி என். ருஹுல் ஹக் கையெழுத்திட்ட மருத்துவ அறிக்கையை பொரளை பொலிசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
சிறுமி தாக்கப்படவில்லை அல்லது சித்தரவதைக்குள்ளாகியிருக்கவில்லை. மேற்பரப்பில் 72% க்கும் மேற்பட்ட தோல் தீயில் எரிந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.
சிறுமி கர்ப்பம் தரிக்காமல் நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
கிருமி தொற்று காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பாக ரிஷாத் வீட்டு பணியாளர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சிறுமியை சங்கர் என்ற தரகர் ஒருவரே பணிக்கு அழைத்து வந்துள்ளார். சிறுமி 20,000 ரூபா மாத சம்பளம் பெற்றுள்ளார்.
ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 6 பேரின் தொலைபேசி தரவுகளை பெறவும், சிறுமிக்கு சம்பளம் வழங்கிய ரிஷாத் பதியுதீனின் வங்கி பதிவுகளை பெறவும், தரகரின் வங்கித் தரவுகளை பெறவும் பொலிசார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உத்தரவு வழங்கியது.