தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மேதகு தமிழ்த் திரைப்படத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விற்பனை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் நுவரெலியா பிரதேச புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா, பிரதான பஸ் தரிப்பிடத்தில் கடையொன்றை நடத்திவரும் நபரொருவரும் அவரது நண்பருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா, கார்கில்ஸ் கட்டட வளாகத்திலுள்ள, பிரதான சந்தேகநபருக்குச் சொந்தமான மற்றொரு கடையில் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு, பென் டிரைவ்களில் படம் பிரதியெடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததையடுத்தே இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும், ஹவா எலிய பகுதியில் வசிப்பவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், இருவரையும் நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.