டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் தங்கி இருந்த கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது.
டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா வரும் ஜூலை 23 ஆம் திகதி ஜப்பானின் தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ளது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் ஒலிம்பிக் திருவிழா இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்படவுள்ளது. முன்னதாக 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே டோக்கியோவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்ததாலும், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாலும் உலகின் மிக முக்கிய பிரபலங்கள் ஆயிரம் பேர் மட்டுமே தொடக்கவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். ஜப்பான் பேரரசர் நரிஹிட்டோ, அமெரிக்க ஜனாதிபதிர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த நபர் ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்க உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வீரர்கள் கிராமத்தில் ஏற்பட்ட முதல் பாதிப்பு இதுதான் என்று டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மாசா தகாயா தெரிவித்தார்.இருப்பினும், தாகாயா அந்த நபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை வெளியிடவில்லை.
டோக்கியோவில் தற்போது அவசர நிலை பிறபிக்கப்பட்டு உள்ளது, அங்கு நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.