28.5 C
Jaffna
October 22, 2021
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

கூட்டமைப்பின் உள்வீட்டு சிக்கல்: சஜித்திற்கு அழைப்பேற்படுத்திய மாவை; போலி செய்தியால் சுமந்திரனுக்கு வைத்த சூடு!

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். பல பத்திரிகைக்காரர்களும் தமது “குறணி“ வேலைகளையெல்லாம் நாரதர் கலகம் என்ற கட்டகரிக்குள் தாமே உள்ளடக்கி, சுய திருப்திப்பட்டு கொண்டு குழப்பங்களில் ஈடுபடுவதுண்டு. கேட்டால் நாரதர் கலகம் என்பார்கள்.

இலங்கை தமிழர் அரசு கட்சிக்குள் இரண்டு முகாம்கள் உருவாகிய பின்னர், அதில் ஒரு தரப்புடன் நின்று கொண்டு, நாரதர் கலகம் என நினைத்துக் கொண்டு ஏதோ ஒரு பக்கம் நின்று கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தும் பத்திரிகையாளர்களும் இருக்கிறார்கள்.

இப்படி கலகம் என வெளியில் சொல்லிக் கொண்டு- ஏதோ ஒரு ஆதாயத்திற்காக வெளியிடும் செய்திகளால் வீணான குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. அப்படி அண்மையில் வெளியான திரிபுபடுத்தப்பட்ட செய்தியொன்றை தெளிவுபடுத்துகிறோம். அந்த செய்தி முதலில் காலைக்கதிர் பத்திரிகையில் வெளியானது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிற்கு நாடாளுமன்றத்தில்  பேசுவதற்கு போதிய நேரம் ஒதுக்குவதில்லையென்ற சர்ச்சையை மாவை சேனாதிராசா, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவிடம் கூறினார் என ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. சஜித் அதற்கு போதிய பிரதிபலிப்பை காண்பிக்கவில்லை, அது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடா லக்ஸ்மன் கிரியெல்லவிடம் பேசுமாறு கூறினார் என்றும், மாவை பின்னர் லக்ஸ்மன் கிரியெல்லவுடன் பேசினார் என்றும் செய்தி வெளியிட்டது.

இந்த செய்தியின் உள்ளடக்கத்தில் சில உண்மைகள் உள்ளன. ஆனால் நிறைய தவறான தகவல்களும் உள்ளன.

உண்மையில் என்ன நடந்ததென்பதை தெளிவுபடுத்துகிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு ஜனநாயக அமைப்பு என கூறிக் கொண்டாலும், உண்மையில் அதற்குள் ஆயுத இயக்கங்களை மிஞ்சிய பாசிச கூறுகள் உள்ளன. தமக்கு விரும்பியவர்களிற்கு நேரம் ஒதுக்குவது, பிடிக்காதவர்களிற்கு நேரம் ஒதுக்காதது என மோசமாக பாசிச அம்சம் உள்ளது. முன்னர் சிவசக்தி ஆனந்தனை அப்படி பழிவாங்கினார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொரடாவாக இருந்த சிறிதரன், ஒவ்வொரு நாளும் தானும், தனக்கு நெருக்கமானவர்களிற்கும் மட்டுமே நேரத்தை ஒதுக்கினார். இரா.சம்பந்தன் பேசும் நாட்களில் அதிக நேரம் எடுத்துக் கொள்வார். அந்த நாட்களில் பார்த்து, பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிற்கு நேரம் ஒதுக்கி விடுவார். சம்பந்தன், மற்றவர்களின் நேரத்தையும் எடுத்து பேசுவார்.

இதனால்தான், நாடாளுமன்றத்தில் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், எம்.ஏ.சுமந்திரன் போன்றோர் அடிக்கடி பேசுவதை போலவும், மற்றவர்கள் பேசாமலிருப்பதை போலவும் பிம்பலம் உருவாகியது.

இந்த சர்ச்சையினாலேயே சிறிதரன் கொரடா பொறுப்பை விட்டு விலக வேண்டியதாகியது.  பின்னர் சாள்ஸ் நிர்மலநாதன் அந்த பொறுப்பை உத்தியோகபூர்வமில்லாமல் வகித்து வருகிறார். சாள்ஸ் நிர்மலநாதன் கூட்டமைப்பு என்றாலும், அவரின் முதலாவது தலைவர் சிறிதரன்தான். சிறிதரனின் சொற்படிதான் நடப்பார். இதனால கொரடா மாற்றம் நிகழ்ந்தாலும், நிலைமையில் மாற்றம் நிகழவில்லை.

முன்னர்தான் பங்காளிக்கட்சிகளிற்கு வெட்டு விழுந்தது. இப்பொழுது, இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியனுக்கும் வெட்டு விழுகிறது. அண்மையில் அவர்கள் இருவரும் இதனை நாடாளுமன்றத்திற்குள் சக எம்.பிக்களுடன் பேசி குறைபட்டுமுள்ளனர். சி.சிறிதரனும், சாள்சும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற அதிருப்தி அவர்களிற்கும் உண்டு.

இதனால் அதிருப்தியடைந்த கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இரண்டும், இது பற்றி சபாநாயகரிடமும், எதிர்க்கட்சி தலைவரிடமும் பேச திட்டமிட்டு வருகின்றன.

அண்மையில், தமிழ் கட்சிகளிற்கிடையிலான ஒற்றுமை முயற்சிக்காக தலைவர்கள் கூடிய போது, ரெலோ மற்றும் புளொட் தலைவர்கள் இந்த விடயத்தை மாவை சேனாதிராசாவிடமும் தெரிவித்துள்ளனர்.

இதற்குள், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா மருத்துவமனைகளிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் தனது திட்டத்தில், வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்விற்கு வழக்கு கிழக்கு சம்மந்தப்பட்ட நிகழ்வுகளிற்கு அந்த பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதுண்டு. ஆனால் வடக்கு கிழக்கின் அனைத்து நிகழ்ச்சிகளிற்கும் மாவை சேனாதிராசாவிற்கும் அழைப்பு அனுப்புவார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக அல்லாமல் இருந்தாலும், முக்கியமான கட்சியொன்றின் தலைவர். தமிழ் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத மனிதர். இந்த காரணங்களினால் அழைப்பு அனுப்பப்படும். எனினும், இதற்காக கொழும்பு செல்லும் நிலையில் மாவை இருப்பதில்லலை. இதனால், இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை.

கடந்த வாரமும் இப்படியான அழைப்பொன்று விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அது பற்றி சஜித்துடன் தொலைபேசியில் உரையாடிய மாவை சேனாதிராசா, தன்னால் கலந்து கொள்ள முடியாது என்பதை தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நேரம் ஒதுக்குவது தொடர்பான பிரச்சனை இருப்பதால், கூட்டமைப்பிற்கு சற்று அதிக நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இந்த விடயத்தை பற்றி கவலைப்பட வேண்டாம், நான் கவனித்துக் கொள்கிறேன் என சஜித் சொன்னார்.

அவ்வளவுதான். விடயம் முடிந்தது.

இந்த இடத்தில் விடயம் முடிந்திருக்கும். ஆனால் மாவை சேனாதிராசா விட்ட ஒரு தவறு சர்ச்சையாகி விட்டது. இதற்கு அடுத்தடுத்த நாள், கொழும்பில் கூட்டமைப்பின் அரசியல்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தின் முடிவில், எம்.ஏ.சுமந்திரனிடம் இதை கூறிவிட்டார்.

அதாவது, கூட்டமைப்புக்கு ஒதுக்கும் நேரம் போதாதென்பதால், சற்று அதிகமாக நேரமெதுக்கும்படி கேட்டதையே மாவை கூறினார்.

ஆனால், அடுத்தடுத்த நாள்- அனேகமாக 10ஆம் திகதியாக இருக்கலாம்- எம்.ஏ.சுமந்திரன் தரப்பு பத்திரிகையான காலைக்கதிர் பத்திரிகையில் முற்றிலும் திரிபுபடுத்தப்பட்ட செய்தி வெளியானது. அதாவது, மாவை சேனாதிராசா இந்த விடயத்தை சஜித்துடன் பேசியதாகவும், லக்ஸ்மன் கிரியெல்லவிடம் பேசும்படி சஜித் கூறியதாகவும் தவறான செய்தி வெளியானது.

இந்த செய்தியை  பார்த்து கொதித்துப் போன மாவை சேனாதிராசா, மறுநாள் தொலைபேசியில் சுமந்திரனை அழைத்து காட்டமாக பேசியுள்ளார். இதன்போது, “என்னையும் அழித்து கட்சியையும் அழிக்கப் போகிறீர்களா?“ என சுமந்திரனிடம் காட்டமாக கேட்டுள்ளார்.

இதற்கு மறுநாள் காலைக்கதிர் பத்திரிகையில், அந்த செய்தியை மாவை மறுத்துள்ளார், தனக்கு நெருக்கமான ஒருவரிடம் கவலைப்பட்டு பேசினார் என, அந்த பத்தியை எழுதிய வித்தியாதரன் “சடைந்து“ எழுதியிருந்தார். பின்னர் சுமந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டதாகவும், மாவையிடம் பேசியதை உறுதி செய்ததாகவும் எழுதியிருந்தார்.

ஆனால், உண்மையில் நடந்தது என்னவாக இருக்க வாய்ப்புள்ளதெனில், முதல்நாள் எம்.ஏ.சுமந்திரனிடம் காட்டமாக மாவை பேசியதை தொடர்ந்து, எம்.ஏ.சுமந்திரனே பத்திரிகை ஆசிரியரை தொடர்பு கொண்டு விடயத்தை கூறியிருக்க வேண்டும். அல்லது அவரது அள்ளக்கையொன்றிடம் கூற, அந்த அள்ளக்கை அந்த போலி செய்தியை கூறியிருக்க வேண்டும். வித்தியாதரனும் அதை நம்பி, செய்தியாக எழுதி விட்டார்.

இந்த விவகாரத்தை மாவை சேனாதிராசா பேசியதில் என்ன தவறு இருந்திருக்க முடியும் என்ற இன்னொரு கேள்வியுமுள்ளது. அவர் ஒரு கட்சி தலைவர். எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் அரசு கட்சியினர் அனைவருக்கும் அவரே தலைவர். இதை பாராளுமன்றத்திற்குள் சுலபமாக தீர்ப்பதற்காக சஜித்துடன் பேசியிருக்க முடியும்.

சஜித்துடன் பேசுவதா, சபாநாயகருடன் பேசுவதா என்பதை கட்சி தலைவர் மாவை தீர்மானிக்கலாம். அதையெல்லாம் கட்சியின் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பும் நிலைமையை உருவாக்கியதுதான், மாவை சேனாதிராசாவின் பலவீனம்.

எம்.ஏ.சுமந்திரன் தரப்பு இந்த விடயத்தை ஏன் சர்ச்சயைாக்குகிறார்கள்? இதன் பின்னணியில் என்ன விடயங்கள் உள்ளன என்பதை நாளை குறிப்பிடுகிறோம்.

 

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
2

Related posts

நாடாளுமன்றம் செல்கிறார் ரணில்!

Pagetamil

வடக்கில் இன்று 42 பேருக்கு தொற்று!

Pagetamil

தமிழர்களை காப்பாற்றிய இராணுவத்தின் மீது நடவடிக்கையா?: பொங்குகிறார் அஸ்கிரிய பீடாதிபதி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!