2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் குறித்து தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
“இந்த திகதிகள் மேலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்” என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்ர் புலமைப்பரிசில் பரீட்சை என்பன எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் இந்த வார தொடக்கத்தில் அறிவித்திருந்தது.
க.பொ.த (உ/த) பரீட்சை ஒக்டோபர் 4 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3 ஆம் திகதி நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு இந்த வார தொடக்கத்தில் அறிவித்திருந்தது.
வழக்கமாக ஓகஸ்ட் மாதம்நடைபெறும் இந்த இரண்டு பரீட்சைகளும் நாட்டில் நிலவும் COVID-19 நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
க.பொ.த (உ/ த) பரீட்சையை எப்போது நடத்துவது என்பது குறித்து இரண்டு அப்பிராயங்கள் இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
“குறைந்தபட்சம் 200,000 பாடசாலை பரீட்சார்த்திகள் முதல் முறையாக க.பொ.த (உ/ த) பரீட்சையில் தோற்றுகிறார்கள். சுமார் 150,000 பேர் இரண்டாவது முறையாக பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். முதல் முறையாக பரீட்சைக்கு தோற்றுபவர்களில் பெரும்பாலோர் அதை ஒத்திவைக்கும்படி எங்களிடம் கேட்டுள்ளனர். இருப்பினும், இரண்டாவது முறையாக பரீட்சைக்கு தோற்றுபவர்கள் அதை ஒக்டோபரில் நடத்த விரும்புகிறார்கள். நாங்கள் ஒரு நியாயமான முடிவை எடுக்க வேண்டும்” என்று அமைச்சர் கூறினார்.
க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள் வெளியிடுவது தொடர்பாகவும் ஒரு பிரச்சினை உள்ளது என்று அமைச்சர் கூறினார். சுமார் 169,000 மாணவர்கள் எட்டு அழகியல் பாடங்களை கற்றுள்ளனர். செயல்முறை பரீட்சைளை நடத்துவதுதற்போதைய நிலைமையில் அமைச்சுக்கு கடினமானது என்றார்.
“பரீட்சைக்கு தோற்றி 622,000 பேரில் சுமார் 169,000 பரீட்சார்த்திகள் அழகியல் பாடங்களை கற்றவர்கள். செயல்முறை பரீட்சைகளை நடத்த முடியாவிட்டால், பாடசாலை மதிப்பீடுகளைப் பயன்படுத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி, ”என்று அமைச்சர் கூறினார்.




