ஒன்று கூடுவதற்கான உரிமை என்பது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், உண்மையில் சுகாதாரப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டுச் செல்லாமலிருப்பது அவசியமாகும் என்று கோட்டா அரசுக்கு குட்டு வைத்துள்ளார், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர்.
கொரோனா கட்டுப்பாட்டு சுகாதார விதிமுறையின் கீழ் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களையும் செய்ய முடியாதென அரசாங்கம் அறிவித்ததுமன், ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிராகக் கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலரை பொலிஸார் தூக்கிச்சென்று பொலிஸ் வண்டிகளில் ஏற்றி நீதிமன்றத்தில் முற்படுத்தினர். அத்துடன், தற்போது கட்டாயமாக தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
இதற்கு பரவலான எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.
தனிமைப்படுத்தல் என்பது ஒரு சுகாதார முன்னெச்சரிக்கை. அதை தண்டனையாகவோ அல்லது தடுப்புக்காவலாகவோ பயன்படுத்தக்கூடாது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று சுட்டிக்காட்டியிருந்தது. இன்று, ஐ.நா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கரும் அதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில்- “ஒன்றுகூடுவதற்கான உரிமை என்பது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியதாகும். அது ஏனைய உரிமைகளான கருத்துச்சுதந்திரம் மற்றும் பொதுநிர்வாகக் கொள்கைகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உரியவற்றுக்கு பிரயோகிப்பதற்கு உதவுகின்றது“ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.




