அரச எதிர்ப்பாளர்களை அடக்குவதன் மூலம் மக்கள் கருத்தை மௌனமாக்கும் நடவடிக்கையை இலங்கை சுதந்திரக் கட்சி கண்டித்துள்ளது.
இலங்கை சுதந்திரக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் ரோஹண லக்ஸ்மன் பியதாச கண்டியில் ஊடகங்களிடம் பேசுகையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை நிலைநிறுத்தும் போர்வையில் தொழிற்சங்கத் தலைவர்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நடத்திய பல போராட்டங்களை குழப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலவந்தமாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவங்களை கண்டிப்பதாக தெரிவித்தார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதற்காக சிறிலங்கா சுதந்திரக்கட்சி செய்த தியாகங்களை இலங்கை பொதுஜன பெரமுன மறந்துவிட்டார்கள் என்றார்.
கடந்த இரண்டு தேர்தல்களின்போது உடன்படிக்கைகள் எட்டப்பட்டதாகவும், ஆனால் தற்போது சு.க. மற்றும் அதன் உறுப்பினர்கள் அதற்கு மாறாக நடத்தப்படுவதாகவும் பியதாச கூறினார்.
தற்போது உர பற்றாக்குறை உள்ளது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளது. பொருளாதார கஷ்டங்களால் சுமையாக இருக்கும் மக்களின் அவல நிலையை கருத்தில் கொள்ளாமல், அதன் நெருங்கிய கூட்டாளிகளின் பொக்கட்டுக்களை நிரப்புவதில் பெரமுன அதிக கவனம் செலுத்துகிறது என்று ரோஹண லக்ஸ்மன் பியதாச கூறினார்.
தரவுகளின்படி, பல குடும்பங்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுகின்றன. இதுபோன்ற விஷயங்கள் எழுப்பப்படும்போது பெரமுன பிரிவினர் தம்மை விமர்சிப்பதாக கூறி, எதிர்க் குற்றச்சாட்டுக்களையே சுமத்துகிறார்கள் என்றார்.
2025 ஆம் ஆண்டில் சு.க தலைமையிலான அரசாங்கத்தை நிறுவ தேசபக்தர்களின் ஆதரவுடன் ஒரு பரந்த இடது சாரித்துவ கூட்டணி உருவாக்கப்படும் என்றார்.
சமூகத்தின் பரந்துபட்ட தரப்பினரின் ஆதரவுடன் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் நம்பிக்கை இருப்பதாக கூறினார்