கடும் வெப்பம் மற்றும் கடும் குளிரால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 7,40,000 பேர் உயிர் இழப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அவுஸ்ரேலிய நாட்டில் உள்ள மோனாஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். உலகம் முழுவதும் சீதோஷண நிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறித்த விவரங்களை இந்த குழு சேகரித்தன. கடந்த 2000 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான கால கட்டம் குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வு 5 கண்டங்களில் 43 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த புதனன்று ஆய்வு முடிவுகள் லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. இந்த முடிவில், “கடந்த 2000 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் அனைத்து நாடுகளிலும் கடும் வெப்பநிலை மாறுபாடு காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் உலக வெப்ப மயமாதலால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இதில் இந்தியாவில் ஆண்டுதோறும் அசாதாரண குளிர் சீதோஷண நிலை காரணமாக 6 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆண்டுதோறும் ஏற்படும் அதிக வெப்பத்தால் 83 ஆயிரத்து 700 இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன. சர்வதேச அளவில் ஆண்டுதோறும் 9.4 சதவீத இறப்புக்கள் அதிகப்படியான குளிர் மற்றும் வெப்பத்தினால் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.