விரும்பாத நாடுகளைத் தாக்க புவிசார் அரசியல் கருவியாகப் மனித உரிமைகள் விவகாரத்தை மேற்கு நாடுகள் பயன்படுத்துகின்றன. இது மனித உரிமைகள் மீதான பாசாங்குத்தனம் என மேற்கு நாடுகளை கடுமையாக சாடியுள்ளது சீனா. இந்த விவகாரத்தில் சீனாவுடன் இணைந்து பக்கப்பாட்டு பாடியுள்ளது இலங்கை.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 47 வது அமர்வின் ஒரு இணையவழி கலந்துரையாடல் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில், இராஜதந்திரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும்அறிஞர்கள் கலந்து கொண்டதாக சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“மேற்கில் மனித உரிமைகள்: சர்வதேச கண்காணிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்காமை” என்ற கருப்பொருளிலான இணைய வழி கலந்துரையாடலை சீனா, பெலாரஸ், ரஷ்யா மற்றும் வெனிசுலா இணைந்து ஏற்பாடு செய்தன. 40 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
“ஒவ்வொரு நாடும் அதன் சொந்த மக்களின் நலன்களில் கவனம் செலுத்துகிறன. ஒவ்வொரு நாடும் மனித உரிமைகளின் உலகளாவிய கொள்கைகளை தங்கள் நாடுகளில் உள்ள யதார்த்தத்துடன் இணைத்து அவர்களுக்கு ஏற்ற அமைப்பை உருவாக்க வேண்டும்“ என ஜெனீவாவிற்கான சீனத் தூதர் ஜியாங் துவான் இந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
அனைத்து நாடுகளும் மனித உரிமைகள் தொடர்பாக கலந்துரையாடி ஒத்துழைத்து செயற்பட வேண்டும்.
மற்றவர்களுக்கு எதிராக ஒருதலைப்பட்ச வற்புறுத்தல் நடவடிக்கைகளை சுமத்தவும், அழுத்த நடவடிக்கையாகவும் மனித உரிமைகளை பயன்படுத்தக்கூடாது என்றார்.
சில மேற்கத்திய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் கடுமையானவை, அவர்கள் பழங்குடி மக்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்துள்ளனர் மற்றும் இராணுவத் தலையீடுகள் மூலம் பிற நாடுகளில் அப்பாவி பொதுமக்களைக் கொன்றனர் என்றார்.
அந்த நாடுகள் மனந் திருத்துவதற்கு பதிலாக, அந்த நாடுகள் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் அப்பட்டமாக தலையிட அரசியல் நோக்கங்களுக்காக பொய் சொல்கின்றன, இந்த நடத்தைகள் ஐ.நா. சாசனத்தையும் கொள்கைகளையும் கடுமையாக மீறியுள்ளன. பிற நாடுகளில் மனித உரிமைகளை பெரிதும் சேதப்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டார்.
பெலாரஸ், ரஷ்யா, வெனிசுலா, ஈரான், வட கொரியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் தூதர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் உரை நிகழ்த்தினர். மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக புலம்பெயர்ந்தோர், பழங்குடி மக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தினர். பலதரப்பு மனித உரிமை அமைப்புகள் நீண்ட காலமாக மேற்கு நாடுகளால் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த பிரச்சினைகள் குறித்து கண்மூடித்தனமாக செயல்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
சில மேற்கத்திய நாடுகள் தங்களை “வளர்ந்த” மற்றும் “ஜனநாயக” நாடுகள் என்று விற்கின்றன. மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து மற்றவர்களுக்கு சொற்பொழிவு செய்வதற்கும் அவர்கள் விரும்பாத நாடுகளை விமர்சிப்பதற்கும் ஆர்வமாக உள்ளன என சில நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்த நாடுகள் “மனித உரிமைகளை” தங்கள் “சலுகை” என்று கருதுகின்றன, மேலும் மனித உரிமைகளை அவர்களின் மேற்கத்திய மதிப்புகளால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். இது காலனித்துவ மனநிலையை வெளிப்படுத்துவதில் மட்டுமே வெற்றி பெறுகிறது, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை மீறுகிறது மற்றும் சர்வதேச மனித உரிமைகள் காரணத்திற்காக பேரழிவு தரும் முடிவுகளை கொண்டு வரும் என்றனர்.
சீனா, பெலாரஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் சார்பில் கலந்து கொண்டவர்கள், இன பாகுபாடு குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர். பொலிஸ் வன்முறை,
பழங்குடி மக்களின் படுகொலை, மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான கடுமையான மனித உரிமை மீறல்கள் பற்றி குறிப்பிட்டனர். பல மேற்கத்திய நாடுகளால் பெருமை பேசும் ஜனநாயக அமைப்பு உயரடுக்கினருக்கான ஒரு அமைப்பு என்று அவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கங்கள் பொதுவான மக்களின் உரிமைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.
மேற்கத்திய முறையை நகலெடுக்க முடிவு செய்வதற்கு முன் வளரும் நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.
இந்த கலந்துரையாடலை நடத்திய சீனா, பெலாரஸ், ரஷ்யா மற்றும் வெனிசுலா ஆகியன மிகக்கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுவதும், உள்நாட்டு மக்களே எதிர்ப்பில் ஈடுபடுவதும் குறிப்பிடத்தக்கது.