முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவரை வாளினால் வெட்டியும், நிறுத்தப்பட்டிருந்த காரை எரித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 6 ரௌடிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் ஜெயில், மறுநாள் பெயில் (பிணை) என ரௌடிகள் கொண்டாட்டமாக யாழ்ப்பாணம் திரும்பியுள்ளனர்.
முல்லைத்தீவு, செல்வபுரத்தில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் முன்னிரவில் புகுந்த ரௌடிக்குழுவொன்று வாள் வெட்டு தாக்குதலை நடத்தியதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றனர்.
இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். எனினும், ரௌடிகள் சிக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் நவாலி பகுதியை சேர்ந்த ரௌடி ஒருவனை கைது செய்தனர்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முல்லைத்தீவு வாள்வெட்டு தாக்குதல் பற்றிய விபரங்களை கக்கினான். ஏன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது? யார் யார் கும்பலில் இருந்தார்கள்? போன்ற விபரங்களை கக்கினான்.
அவன் வழங்கிய தகவலின்படி. தாக்குதலிற்கு சென்ற மேலும் 5 பேர் கைதாகினர். நவாலியை சேர்ந்த மேலும் 2 பேரும், புத்தூரை சேர்ந்த 3 பேருமே கைதாகினர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாமே தாக்குதலை நடத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினார். தாக்குதலிற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், வாகனங்களும் மீட்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவில் ரௌடிகளாக இருந்து தற்போது சுவிஸிற்கு சென்றுள்ள சிலரின் கட்டளைப்படியே தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர்.
முல்லைத்தீவில் தாக்குதலிற்கு உள்ளானவர் வெளிநாட்டு முகவராக செயற்பட்டதாகவும், தாக்குதலிற்கு உத்தரவிட்டவர்கள் வெளிநாடு செல்ல முயன்றபோது ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் சர்ச்சைகளையடுத்தே இந்த தாக்குதல் நடந்ததாகவும் கைதானவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான ரெடிளகள், சான்றுப்பொருட்கள் கடந்த 7ஆம் திகதி முல்லைத்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் நேற்று முன்தினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




