அழகுக்கலை நிபுணர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது காதலனை கைது செய்த போலீசார், 19 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். முகநூல் மூலம் ஏற்பட்ட நட்பினால் முறை தவறிய உறவை வளர்த்த இருவரும், இதன் விலையை கொடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்த கங்காதேவி பியூட்டி பார்லர் நடத்தி வந்த நிலையில், கடந்த 6ஆம் திகதி இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது கணவர் சென்று பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கங்காதேவி மயக்க நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்து விசாரித்த போது, அழகு நிலையத்திற்கு வந்த மூன்று நபர்கள், தனது கை, கால்களை கட்டி வாயையும் துணியால் அடைத்து, பாலியல் பலாத்காரம் செய்து தான் அணிந்திருந்த 19 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோதே, கங்காதேவி தனது வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொள்ளையர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதால், அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்பட்டது.
இந்த நிலையில், அழகு நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கமிராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, ஒரு நபர் அடிக்கடி அங்கு வந்து சென்றதும், கொள்ளை நடைபெற்றதாக கூறப்படும் தினத்தன்று வந்திருந்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து கங்காதேவியின் செல்போனை ஆய்வு செய்து ஊட்டியில் பதுங்கியிருந்த, மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவனை, போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், மனைவி, பிள்ளைகளை பிரிந்து சென்னையில் வாழ்ந்து வந்த முத்துப்பாண்டிக்கு, கங்காதேவியுடன் ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டதும், அவினாசியில் தனியார் தொழிற்சாலையில் வேலைவாங்கிக் கொடுத்து அங்கேயே முத்துப்பாண்டியை தங்க வைத்து கங்காதேவி தகாத உறவை வளர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. அடிக்கடி இருவரும் பார்லரில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து நகை, பணத்துடன் ஓடிப் போவதற்காக திட்டம் தீட்டி, நகை கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
கங்காதேவியிடம் இருந்து நகைகளை வாங்கிக் கொண்டு, ஊட்டியில் அவருடன் உறவு வளர்க்க காத்திருந்த முத்துப்பாண்டிக்கும் கைவிலங்கு பூட்ட போலீசார் வந்த பிறகுதான் உண்மை உரைத்துள்ளது.
முகமறியாமல் ஏற்படும் முகநூல் காதல்கள் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவமும் சாட்சி.