யாழில் இயங்கிய ரியூப் தமிழ் என்ற யூரியுப் குழுவின் டிவினியா நிலுசினியின் தடுப்புக்காவல் தொடர்பில் விளக்கமளிக்க எதிர்வரும் 13ஆம் திகதி மன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே உத்தரவிட்டுள்ளார்.
டென்மார்க்கை தலைமையகமாக கொண்டு யாழ்ப்பாணத்தில் இயங்கிய ரியூப் தமிழ் என்ற யூரியுப் குழுவின் பணிப்பாளர் டிவினியா நிலுசினியைக் கைது செய்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தடுப்புக்காவலில் வைத்துள்ளமை சட்டரீதியற்றதென நேற்று முன்தினம் மாலை, நகர்த்தல் பத்திரம் ஊடாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா வாதத்தை முன்வைத்திருந்தார்.
அதனை ஆராய்ந்தே கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே இந்த அழைப்பாணையை பிறப்பித்தார்.
‘இந்த கைது தொடர்பில் மார்ச் மாதம் 26ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் கொழும்பு நீதிவான். நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ரியூப் தமிழ் என்ற யூரியூப் குழுவின் பணிப்பாளர் டிவினியா நிலுசினியும் அந்த குழுவின் உதவிப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் பணிப்பாளர் விமல்ராஜ் என்பவரும் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பின்னர் கொழும்பு பயங்கவாத தடுப்புப் பிரிவு தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் தரப்பால் கூறப்பட்டது.
இந் நிலையிலேயே சட்டத்தரணி கே.வி.தவராசா நகர்த்தல் பத்திரம் ஊடாக மேற்படி வாதங்களை முன்வைத்திருந்தார்.
கைது செய்யப்பட்ட டிவினியா நிலுசினி தங்காலை தடுப்பு முகாமிலும், விமல்ராஜ் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைமையகத்திலும் 3 மாதங்களுக்கு. மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய பயங்கரவாத தடைச்சட்டத்தின் 9(1) ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சரால் வழங்கப்படும் தடுப்புக் காவல் உத்தரவு அவசியமாகும்.
இந்த விவகாரத்தில் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டதாகவோ அல்லது தடுப்பு காவலில் இருக்கும் கைதிக்கு அவ் உத்தரவின் பிரதிகள் வழங்கப்பட்டதாகவோ கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை எவ்விதஅறிவித்தல்களும், அறிக்கைகளும் இம்மன்றுக்கு வழங்கப்பட வில்லை.
அவர்களின் கைதும் தடுத்து வைப்பும் சட்டத்துக்கு முரணானது. சட்டவிரோதமான கைது, தடுப்புக் காவலுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய டிவினியா நிலுசினியின் அறிவுறுத்தல்களைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் உள்ள நிலையில், நேரில் சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படாது விடினும் குறைந்த பட்சம் தொலைபேசி ஊடாக அறிவுறுத்தல்களை பெறுவதற்கு நடவடிக்கை வேண்டும்.
அவருடன் பலமுறை தொலைபேசியில் கதைக்க எனது இளநிலை சட்டத்தரணி பலமுறை விண்ணப்பித்தபோதிலும் பொலிஸாரால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அது மட்டுமல்ல, பயங்கரவாத தடைச்சட்டத்தின் 9(]) ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சரால் வழங்கப்படும் தடுப்புக் காவல் உத்தரவு 3 மாதங்களின் பின்னர் புதுப்பிக்கப்படவேண்டும்.
எனது சேவை பெறுநர் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் முடிவடைந்து விட்டது.
இன்று வரை குறித்த தடுப்புக் காவல் கட்டளை தொடர்பாகவோ அவர்களின் கைது தொடர்பாகவோ எந்த அறிக்கையும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவில்லை.
பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரை இந்த மன்றுக்கு அழைத்து இந்த விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்க உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கோரினார்.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே, பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியை இம்மாதம் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பினார்.




