சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ புதிய வில்லியாக நடிக்கும் அக்ஷையா, ரசிகர்களிடம் புதிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
சன் டிவி சீரியல்கள் என்றாலே சொல்லவே தேவையில்லை இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தவையாகதான் இருக்கும். அந்த வகையில் தற்போது ஒளிப்பரப்பாகி வரும் முக்கியமான சீரியல் ‘ரோஜா’. தற்போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதன்மை இடத்தில் இருந்து வரும் இந்த சீரியல் 800 எபிசோடுகளை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் கதாநாயகனாக சிபு சூரியனும், நாயகியாக பிரியங்கா நல்காரியும் நடிக்கின்றனர். இதோடு முக்கிய கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் நீண்ட நாட்களாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஷாமிலி குமார். இவரின் நடிப்புக்கு ஏகப்போக வரவேற்பு இருந்து வந்தது. விறுவிறுப்பாக சீரியல் நகர்ந்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென நடிகை ஷாமிலி குமார் விலகுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஷாமிலி தற்போது கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.
இதையடுத்து இந்த வில்லி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது. பல்வேறு பெயர்கள் அடிபட்ட நிலையில் சன் தொலைக்காட்சியில் வி.ஜே.வாக இருக்கும் அக்ஷையா நடிக்க இருப்பது உறுதியானது. ஆனால் அவர் ஷாமிலி அளவுக்கு மிரட்டுவாரா என்ற கேள்விகள் ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால் தான் ஒரு கைதேர்ந்த நடிகை என்பதை சில எபிசோடுகளிலேயே நிரூபித்துக் காட்டினார் அக்ஷையா. இந்நிலையில் ரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றை அக்ஷையா விடுத்துள்ளார். இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக மாறியிருக்கும் எனக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும், நான் நடிக்கும் கதாபாத்திரத்தில் தனது முழு நடிப்பையும் வெளிப்படுத்துவேன் என்றும், உங்களின் ஆசியும், அன்பும் தேவை என கேட்டுக்கொண்டுள்ளார்.