கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து ஒவ்வொரு நாடாக மீண்டும் வரும் நிலையில், டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக இருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தடுப்பூசிகள் கண்டுபிடித்துள்ளன.
கடந்த ஆண்டு இறுதியில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் ஜனவரி 16-ந்தேதியில் இருந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பைசர், மாடர்னா தடுப்பூசிகளை செலுத்த ஆர்வமாக உள்ளன.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிகக்கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. இதற்கு உருமாறிய டெல்டா வைரஸ்தான் காரணம் என வல்லுநர்கள் கண்டறிந்தனர். இந்த வைரஸ் தற்போது உலகளவில் பெரும்பாலான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உருமாறுவதற்கு முன் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழம்- அஸ்ட்ரா ஜெனேகா, கோவேக்சின், புட்னிக் வி போன்ற தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 95 சதவீதத்திற்கு மேல் செயல்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டது.
உருமாறிய வைரஸ்க்கு எதிராக அதே செயல்திறன் கொண்டதாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. பெரும்பாலான நிறுவனங்கள் அதே செயல்திறன் கொண்டவையாக இருக்கும். இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்திய பின் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, உயிரிழப்போர் எண்ணிக்கை மிகமிக குறைவாக இருக்கும் என்றன.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்றில் இருந்து பைசைர் தடுப்பூசியால் பாதுகாக்கப்படும் மக்களின் சதவீதம் சற்று குறைந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஜூன் 6-ந்தேதியில் இருந்து ஜூலை மாதம் தொடக்கம் வரை பைசர் தடுப்பூசியால், தொற்றுக்கு எதிராக பாதுகாக்கப்பட்ட மக்களின் சதவீதம் 64 சதவீதமாகும். இந்த சதவீதம் இந்த காலக்கட்டத்திற்கு முன்னதாக 94 சதவீதமாக இருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. செயல்திறன் சற்று குறைந்தாலும் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதில் சிறந்த தடுப்பு அரணாக பைசர் இருப்பதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
94 சதவீதத்தில் இருநது 64 சதவீதமாக குறைந்ததன் மூலம் இஸ்ரேல் நாட்டில் டெல்டா வைரஸ் பரவியுள்ளது என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகிறது என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லா வைரஸ் முதன்முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்டது. அதன்பின் உலகின் பல்வேறு நாடுகளில் தென்பட்டது. ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கை தளர்த்தி, சகஜ நிலைக்கு திரும்ப நினைக்கும்போது, டெல்டா வைரஸ் ஊரடங்கு தளர்வுகள் குறித்து யோசிக்க வைத்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில் தற்போது வரை 57 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.