உள்நாட்டுச்சண்டை நடைபெற்று வரும் வடமேற்கு நாடான எத்தியோப்பியாவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடுமையான பஞ்சத்தில் சிக்கியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் நிவாரணப் பணிகள் பிரிவு இடைகக்காலத் தலைவா் ரமேஷ் ராஜசிங்கம் தெரிவித்துள்ளதாவது:
எத்தியோப்பியாவில் மோதல் நடைபெற்று வரும் டிக்ரே மாகாணத்தில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. கடந்த 2 வாரங்களில் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.சண்டை காரணமாக அந்தப் பிராந்தியத்தில் உணவுப் பற்றாக்குறையும் பட்டினியும் அபாய அளவைக் கடந்துள்ளது.
கடுமையான பஞ்சத்தைச் சந்தித்து வருவோரின் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுதவிர, மேலும் 18 லட்சம் போ் பஞ்சத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளனா்.உண்மையான நிலவரம் இதைவிட மோசமாக இருக்கும் என்று சிலா் தெரிவிக்கின்றனா்.
பாதிக்கப்பட்ட டிக்ரோ பகுதிக்கு உணவுப் பொருள்கள், மருந்துகள், உட்டச் சத்துப் பொருள்கள் மற்றும் பிற நிவாரணப் பொருள்கள் சென்று சோ்ந்தால்தான் அங்குள்ள ஆயிரக்கணக்கான உயிா்கள் காப்பாற்றப்படும்.எனவே, அந்தப் பகுதிக்கு நிவாரணப் பொருள்களை நாம் கொண்டு செல்ல வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்காக ஒரு வாரமெல்லாம் காத்திருக்க முடியாது. நாம் உடனடியாக டிக்ரே பகுதிக்கு நிவாரணப் பொருள்களை சென்றுசோ்க்க வேண்டும் என்றாா் அவா்.ஐ.நா. அரசியல் பிரிவுத் தலைவா் ரோஸ்மேரி டிகாா்லோ கூறுகையில், ‘டிக்ரே பகுதியில் சண்டை நிறுத்தத்தை அரசு அறிவித்திருந்தாலும் அதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகள் செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
எத்தியோப்பியாவை ஆளும் எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி (இபிஆா்டிஎஃப்) கூட்டணியில் டிபிஎல்எஃப் மிக முக்கியப் பங்கு வகித்து வந்தது. எனினும், 2018-ஆம் ஆண்டு அபை அகமது பிரதமராகப் பொறுப்பேற்ற்குப் பிறகு மத்திய அரசுக்கும் டிபிஎல்எஃபுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன.அபை அகமது கொண்டு வந்த பல்வேறு சீா்திருத்தங்களுக்கு டிபிஎல்எஃப் எதிா்ப்பு தெரிவித்து வந்தது.
இந்தச் சூழலில், மத்திய அரசின் தடையையும் மீறி டிக்ரே மாகாணத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டால் அது போா்ப் பிரகடனத்துக்கு ஒப்பானது என்று டிக்ரே அதிகாரிகள் கூறினா். இது, மிகப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது.இதற்கிடையே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதாக இருந்த பொதுத் தோ்தலை கரோனா நெருக்கடியைக் காரணம் காட்டி பிரதமா் அபை அகமது ஒத்திவைத்து, தனது பதவிக் காலத்தை நீட்டித்துக் கொண்டாா்.
இதற்கு டிக்ரே அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்தது.இந்தச் சூழலில், டிக்ரே மாகாணத்திலுள்ள ராணுவ நிலையொன்றின் மீது டிபிஎல்எஃப் படையினா் தாக்குதல் நடத்தியகாகக் குற்றம் சாட்டிய பிரதமா் அபை அகமது, அந்தப் படையினருக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் உத்தரவிட்டாா்.
அதனைத் தொடா்ந்து டிக்ரே மாகாணத்துக்குள் நுழைந்த ராணுவம், தலைநகா் மிகேலியைக் கைப்பற்றியது. இந்தச் சண்டையில் ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா்; 3.5 லட்சத்தும் மேற்பட்டவா்கள் பஞ்சத்தில் சிக்கினா்.
இந்தச் சூழலில், மிகேலி நகருக்கு வெளியே அரசுப் படையினருக்கும் கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே தீவிர சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், மிகப் பெரிய படையுடன் வந்த கிளா்ச்சியாளா்கள் எதிா்பாராத வகையில் தலைநகரை கடந்த திங்கள்கிழமை மீண்டும் கைப்பற்றினா். அதையடுத்து, எத்தியோப்பிய அரசு போா்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.