பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவதால் இலங்கையில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்பதை போன்ற பிம்பத்தை அவரது ஆதரவாளர்கள் உருவாக்க முயன்று வரும் நிலையில், உண்மை நிலை அதுவல்ல என்பதை புட்டுபுட்டு வைத்துள்ளார் பெரமுனவின் பங்காளிக்கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர.
நேற்று ஊடகங்களுடன் அவர் பேசிய போது,
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வந்து அமைச்சரானால் மறுநாள் காலை நினைப்பதெல்லாம் நடந்து விடாது. இந்த நெருக்கடி குறித்து நாம் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். இன்று நாட்டில் ஒரு பெரிய நெருக்கடி உள்ளது. நம் நாட்டில் டொலர்கள் இல்லை. 2025ஆம் ஆண்டில் கடனை செலுத்த 29 பில்லியன் டொலர் தேவை.
கோட்டாபயவின், மஹிந்தவின் அரசாங்கமோ அல்லது பசில் நாடாளுமன்றத்திற்கு வந்ததால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்றிருக்காமல், நாட்டு மக்களிற்கு முதலில் பிரச்சனைகளை தெரிவிக்க வேண்டும். அப்படி கூறினால், இந்த பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை மக்களிடம் கேட்க முடியும்.
ஏனென்றால் நாம் அனைவரும் இதை எதிர்கொள்ள வேண்டும். எவரேனும் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக கூறினால், அப்படியில்லை. உண்மை நிலைமை இதுதான்.
இந்த அமைச்சு பதவிகளை பசில் ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டதென்றே நான் நினைக்கிறேன். இந்த அமைச்சு பதவிககளை பசில் ராஜபக்ஷவே நியமித்தார். அதேபோல, இராஜாங்க அமைச்சுக்களை பசில் ராஜபக்ஷ மற்றும் பி.பி.ஜயசுந்தரவும் இணைந்தே தயரித்தனர். அமைச்சர்களையும் அவர்களே நியமித்தனர்.
அவ்வாறு உருவாக்கப்பட்டவையே கறுவா அமைச்சு, நகைப்பிற்குள்ளான பற்றிக் அமைச்சு எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற அமைச்சுக்களை பசிலும், பி.பி.ஜயசுந்தரவுமே உருவாக்கினர்.
எம்மை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, அதிகாரங்களை அவர்களே வைத்துள்ளனர். அதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
பசிலும், ஜயசுந்தரவும் பெயரிட்ட அமைச்சரவையே இங்குள்ளது. எனவே, ஜனாதிபதிக்கு அன்பாக ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறோம். நாம் உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். உங்களுக்கு பெரிய ஆற்றலும் சக்தியும் உள்ளது. மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அந்த திறன் உள்ளது. நாங்கள் ஒன்றாக வேலை செய்வோம்.
கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. பிரதேசசபை உறுப்பினர்களிற்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அமைப்பாளர்களை 5 சசத்திற்கும் மதிப்பதில்லை. இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வ்த இலங்கை சுதந்திரக் கட்சி இன்று இல்லாமலாக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் எமக்கு பெரும் வருத்தமுள்ளது.