கார்த்தி நடிப்பில் உருவாகயிருந்த ‘கைதி 2’ படத்திற்கு தடை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் – கார்த்தி கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘கைதி’ வித்தியாசமான கதைக்களத்தோடு உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற இப்படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, முழுக்க ஆக்ஷ்ன் மட்டுமே இருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘கைதி 2’ ஆம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதற்கிடையே இயக்குனர் ராஜீவ் ரஞ்சன் என்பவர், தான் எழுதிய கதையை பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம் கூறியதாகவும், கதை பிடித்திருப்பதாக கூறி ரூ.10 ஆயிரத்தை முன்பணமாக தன்னிடம் வழங்கியதாக தெரிவித்தார். அண்மையில் ‘கைதி’ படத்தை பார்த்ததாகவும், திரைப்படத்தில் இரண்டாம் பகுதி, என்னுடைய கதையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 4 கோடி ரூபாயை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வழங்கவேண்டும் என கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் ராஜீவ் ரஞ்சன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கைதி படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யவும், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் தடை விதித்தார். மேலும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.