தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஏற்பாடு செய்த ஒற்றுமை கலந்துரையாடல் இரண்டாவது முறையாகவும் பிசுபிசுத்துள்ளது. இன்று (4) கலந்துரையாடலுக்கு திட்டமிடப்பட்ட நிலையில், அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலாகவே சுருங்கியுள்ளது.
ரெலோ அழைப்பு விடுத்த- தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வெளியிலிருந்த கட்சிகள் எதுவும் இன்று கலந்துரையாடலில் பங்கேற்காது.
பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி, தமிழ் கட்சிகளிற்கிடையில் ஒற்றுமை முயற்சியை ஆரம்பிக்கிறோம் என ரெலோ ஒரு அழைப்பை கடந்த வாரம் விடுத்திருந்தது. அதில், தமக்கு உவப்பில்லாத தரப்புக்களிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்புக்களிற்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ் தேசிய கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் அந்த கூட்டம் பிசுபிசுத்தது.
இதையடுத்து, இன்று ஒரு கலந்துரையாடலுக்கு ரெலோ அழைப்பு விடுத்தது. விட்ட தவறுகளை திருத்திக் கொள்கிறோம் என குறிப்பிட்ட ரெலோ, தமிழ் தேசிய கட்சியையும் கலந்துரையாடலுக்கு அழைத்தது.
இதன்போது, க.வி.விக்னேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்திருந்தார். தமது தரப்பில் அனைத்து கூட்டணி கட்சிகளிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில், தனது சார்பில் ஒருவரை கலந்துரையாடலுக்கு அனுப்புவதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனினும், பிந்திய நிலைமையில் அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நேற்று (3) மாலை தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்தித்து கலந்துரையாடியதில், உடனடியாக இந்த ஒற்றுமை கூட்டங்களில் கலந்து கொள்வதில்லையென தீர்மானித்துள்ளனர். ஒற்றுமை முயற்சிகள் அவசியமென்ற போதும், அது வெளிப்படையாக- கொள்கைரீதியிலானதாக- அமைகிறதா என்பதை அவதானித்து, அதன் பின் அவற்றில் கலந்துகொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் இன்று கலந்துரையாடலில் பங்கேற்க மாட்டார்கள்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்காது.
இதனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 கட்சிகளுமே இன்று மீண்டும் கூடி பேசுவார்கள்.