ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் போஸ்டன் டைனமிக்ஸ் எனும் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியதை கொண்டாடும் விதமாக பிரபல பாய் பேன்ட் மற்றும் அதன் உலகளாவிய பிராண்ட் தூதரான BTS உடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
வீடியோவில், பாப் ஐகான்களான BTS குழுவினர் போஸ்டன் டைனமிக்ஸின் இரண்டு ரோபோக்களான ஸ்பாட் மற்றும் அட்லஸுடன் – ஹூண்டாயின் அயோனிக் மின்சார வாகனத்தின் பிராண்டின் தீம் பாடலான ‘அயோனிக்: ஐம் ஆன் இட்’ என்பதற்கு நடனமாடுவதைக் காண முடிகிறது.
இந்த வீடியோவை ‘Hyundai x Boston Dynamics | Welcome to the Family with BTS’ என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவில் உள்ள பாடல் கடந்த ஆண்டு ஹூண்டாயின் பிரத்யேக மின்சார வாகன பிராண்டான அயோனிக் அறிமுகப்படுத்தப்பட்டதைக் கொண்டாட கே-பாப் இசைக்குழுவால் இசையமைக்கப்பட்டது.
போஸ்டன் டைனமிக் ரோபோக்கள் நடனம் போன்ற உடல் இயக்கங்களை மேற்கொள்ளவும் புரோகிராம் செய்யப்படலாம் என்பதை இந்த வீடியோ சிறப்பித்துக் காண்பிக்கிறது. இந்த வீடியோ இப்போது தொழில்துறையில் இருப்பவர்களையே அசர வைத்துள்ளது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனை பார்த்த மக்கள் அசந்து போய் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.