இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தமிழுக்கென்று தனி ஓடிடி தளம் வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் முடங்கியதால் மக்கள் பொழுதுபோக்கிற்காக ஓடிடி தளங்கள் பக்கம் படையெடுத்தனர். மேலும் படத்தை எடுத்து முடித்து தயாரிப்பாளர்களும் படங்களை எப்படி விற்பது என்று தெரியாமல் தங்கள் படங்களை ஓடிடியில் விற்க ஆரம்பித்தனர். இது ஓடிடி தளங்களுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது. இதன் மூலம் இந்தியாவில் ஓடிடி தளங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது.
தற்போது உருவாகியுள்ள பெரும்பாலான படங்கள் ஓடிடி தளங்களை நோக்கியே களமிறங்கி வருகின்றன. மேலும் எதிர்காலத்தில் திரைத்துறையில் ஓடிடி தளங்களுக்கு பெரும் பங்கு உருவாக உள்ளது. ஓடிடி தளங்களின் வரவு சிறிய படங்களுக்கும் அதிக வாய்ப்பபை உருவாக்கும் என்று நம்பிக்கை உருவாகியுள்ளது.
தற்போது ஒவ்வொரு மொழிக்கும் தனியாக ஓடிடி தளங்கள் உருவாகி வருகின்றன. இந்தியில் Atl Balaji, Voot போன்ற ஓடிடி தளங்கள் உருவாகியுள்ளன. தெலுங்கில் Aha Video என்ற ஓடிடி தளம் உருவாகியுள்ளது. மலையாளத்தில் Neestream ஓடிடி தளம் உருவாகியுள்ளது. அதுபோல தமிழுக்கும் தனியாக புதிய ஓடிடி தளம் உருவாக வேண்டும் என்று இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் கோரிக்கை வைத்துள்ளார்.
கேரள அரசின் ஓ. டி. டி தளம்: இந்தியாவில் முதல்முறையாக முன்னெடுப்பு#Kerala #OTT #India pic.twitter.com/6fniJ3ZBQK
— Thanthi TV (@ThanthiTV) July 2, 2021
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும். சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவு காலம். அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம். தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் அவசியம்” என்று தெரிவித்ததுடன் முதல்வர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.