கமலின் ‘விக்ரம்’ படத்தில் நான்கு வில்லன்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலை ஒதுக்கிவிட்டு தற்போது சினிமா பக்கம் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் கமல். அவரின் கைவசம் ‘இந்தியன் 2’, விக்ரம், பாபநாசம் 2 ஆகிய படங்கள் உள்ளது. இருந்தப்போதிலும் முழு கவனம் செலுத்தி வருவது ‘விக்ரம்’ படத்தில் மட்டும்தான். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பது தெரிந்த விஷயம். கமலின் சொந்த நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்து வருகிறது.

ஏற்கனவே இப்படத்தின் வித்தியாசமான டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். வேட்டையோடு விளையாடு படத்திற்கு பிறகு இந்த படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் சகோதரர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என தோன்றுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக நான்கு முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் மலையாள நடிகர்கள் பகத் பாசில், அந்தோணி வர்கீஸ் ஆகிய இருவரும் இணைந்துள்ளனர். இதேபோன்று ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, கமலுக்கு வில்லனாக நடிக்கலாம் என்ற தகவலும் உலா வருகிறது. சமீபத்தில் நடிகர் நரேனும் இந்த படத்தில் இணைந்துள்ளார் . அதோடு இந்த படத்தின் படத்தின் ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் பணியாற்ற உள்ளதை லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.