கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசம் ஆபத்தான பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு இலக்காகி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அவசரப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த மூவர் ஒரே நாளில் மரணமடைந்ததனால் 100 பேருக்கு எழுமாறாக எடுக்கப்பட்ட பீ .சி.ஆர். பரிசோதனையில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து மருதமுனை மூன்றாம் பிரிவை எதிர்வரும் 14 நாட்களுக்கு முடக்க தீர்மானித்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் தெரிவித்தார்.
இன்று அவரது அலுவலகத்தில் ஊடகவிலாளர்களை சந்தித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
ஒரே நாளில் மூவர் மரணமடைந்ததை அடுத்து 200 பேருக்கு மருதமுனை பிரதேசத்தில் எடுக்கப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் இருவர் மட்டுமே தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர். ஆனாலும் 100 பேருக்கு எழுமாறாக எடுக்கப்பட்ட பீ .சி.ஆர். பரிசோதனையில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையானது ஆபத்தான ஒன்றாகும். அதனாலயே மருதமுனை மூன்றாம் பிரிவை எதிர்வரும் 14 நாட்களுக்கு முடக்க கல்முனை மாநகர முதல்வர், கல்முனை பிரதேச செயலாளர், பொலிஸ், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி உட்பட பலர் அடங்கிய குழுவினர் தீர்மானித்துள்ளோம்.
மாலை 05 மணிமுதல் மருதமுனை பிரதேசத்தில் போக்குவரத்து தடை அமுலாகுவதுடன் மருந்தகத்தை தவிர ஏனைய சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட வேண்டும். மூடப்பட்டுள்ள பிரதேசத்தில் தொடர்ந்தும் பீ .சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளத்துடன் மூடப்பட்ட பிரதேசங்களை அண்டிய பிரதேசங்களுக்கும் அண்டிஜன் பரிசோதனை செய்யப்பட உள்ளது. எதிர்வரும் பெருநாள் காலம் என்பதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளில் வழமையாக காட்டும் அசமந்த போக்கை இனியும் கடைபிடிக்காமல் தீவிரமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டு கொண்டார்.