கிராமங்களில் இருக்கும் பல மக்களுக்கும் ஏன் நகரங்களில் இருக்கும் சிலருக்கும் விமானத்தில் வானில் பறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அது பலருக்கும் சாத்தியமாவதில்லை. ஆனால், நாம் செல்லும் காரே வானில் பறந்தால் எப்படி இருக்கும் என்று நம்மில் பலரும் யோசித்து இருப்போம். ஹாரி பாட்டர் போன்ற பல ஹாலிவுட் படங்களிலும் ஏன் பட்டணத்தில் பூதம் போன்ற தமிழ் படங்களிலும் கூட பறக்கும் கார் என்பதை நாம் பார்த்து இருப்போம். அதுபோல் நாமும் பறக்க முடியுமா என்ற ஆசை நமக்கு இருந்திருக்கும். அந்த ஆசை நிறைவேறும் காலம் மிகஅருகில் வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், அப்படி ஒரு கண்டுபிடிப்பு தான் AirCar.
இந்த ஏர்கார் என்பது ஒரு பறக்கும் கார். இது சாதாரணமாக வாகனம் போல தோன்றும், ஆனால் தேவைப்பட்டால் பறக்கும் பயன்முறையில் சட்டென்று பறக்கவும் செய்யும். கடந்த ஜூன் 28 ஆம் திகதியன்று அன்று இதற்கான சோதனை நிகழ்த்தப்பட்டது.
கடந்த ஜூன் 28 ஆம் திகதி அன்று நைட்ராவின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தென்மேற்கு ஸ்லோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு 35 நிமிடங்கள் 8200 அடி உயரத்தில் மணிக்கு 170 கிமீ வேகத்தில் பறந்துச் சென்றது.
தரையிறங்கிய பிறகு, ஒரு பொத்தானைக் கிளிக் செய்தால் வெறும் மூன்று நிமிடங்களில் விமானமாக இருந்த ஏர்கார் ஸ்போர்ட்ஸ் கார் ஆக மாறிவிடும்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க விமானத்தை கிளெயின் விஷன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் கிளெயின் அவர்களே இயக்கியுள்ளார். கிளெயின் அவர்களின் 20 வருட கடின உழைப்புக்குப் பிறகு இந்த ஏர்கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்துக்கு முன்பே சுமார் 140 சோதனை ஓட்டத்துக்கு இது உட்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏர்காரை அதிகபட்சமாக மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வைக்கவும், ஒரு முறை ஃபியூயல் டேங்கை நிரப்பினால் 1,000 கி.மீ தூரம் வரை செல்லும் வங்கியில் இதை மேம்படுத்தவும் கிளெயின் நோக்கமாகக் கொண்டுள்ளார்.