நாவலப்பிட்டி இம்புல்பிட்டிய பிரதேசத்துக்கான குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 30.06.2021 அன்று மாலை இடம்பெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமாகிய பாரத் அருள்சாமியின் வேண்டுக்கோளிற்கு அமைவாக ஹல்நூர் தொண்டு நிறுவனத்தின் 50 இலட்சம் ரூபா நன்கொடையின் கீழ் இத்திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹல்நூர் தொண்டு நிறுவனத்தின் தலைவர் மொகமட் அலியார், மற்றும் பொதுமக்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் இப்பகுதியை சேர்ந்த 600 குடும்பங்களை உடைய 1500 பயனாளிகள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போது சில பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களுக்கு கட்டுப்பபடாமல் தன்னிச்சையாக செயற்படுகின்றன. அவற்றின் கொட்டத்தை அடக்குவதற்கான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க ஆட்டம் ஜுலை முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும்.” – என்று இ.தொ.காவின் உப செயலாளரும், பிரஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி சூளுரைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முழு போராட்டத்தின் விளையாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக அயிரம் ரூபா கிடைக்கப்பெற்றது. கடந்த காலங்களில் சம்பள உயர்வு தொடர்பான நடவடிக்கை கூட்டு ஒப்பந்தம் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டுவந்தது. அப்போது கூட்டு ஒப்பந்தத்தை அடிமை சாசனம் என விமர்சித்தவர்கள், இன்று கூட்டு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.
எமது மக்களுக்கான தொழில் மற்றும் இதர உரிமைகளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் வென்றெடுக்கும். கம்பனிகளுடன் எமது பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார். அதன் அடிப்படையில் நிச்சயம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
சில கம்பனிகள் தொழிற்சங்கங்களுக்கு கட்டுப்பாடாமல் செயற்பட்டுவருகின்றன. அவற்றுக்கு எதிரான எமது தொழிற்சங்க ஆட்டம் ஜுலை முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும்.
அதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தூங்குகிறதா என கேட்டு சிலர் இன்று விமர்சன அரசியல் நடத்துகின்றனர். இ.தொ.கா. தூங்கவில்லை. களத்தில் இறங்கி கம்பீரமாக செயற்படுகின்றது. ஆழ்ந்த நித்திரையில் இருந்தவர்களே, எமது சேவையைக் கண்டு அஞ்சி, திடீரென எழுந்து உளறி, விமர்சன அரசியல் நடத்துகின்றனர். எப்படிதான் விமர்சித்தாலும் மக்கள் எம் பக்கம். அவர்களுக்கான எமது பணிகள் தொடரும்.” – என்றார்