கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவிலில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் காயடைந்துள்ளனர். ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று (30) இரவு 10 மணியளவில் கோண்டாவில், செல்வபுரம் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.
கோண்டாவில், இலங்கை போக்குவரத்து சாலைக்கு அண்மையாக இந்த பகுதி உள்ளது. அங்கு வீடொன்றில் இரண்டு இளைஞர்கள் வீடியோ எடிட்டிங் செய்து வருகிறார்கள்.
அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த அனைவர் மீதும் வாள் வெட்டு, கொட்டான் அடி தாக்குதல் நடத்தியது. யாரிடமும் எந்த பேச்சும் இருக்கவில்லை. சரமாரியான வாள்வெட்டு நடந்தது.
வாசலில் காத்திருந்த வாடகை முச்சக்கர வண்டி சாரதிக்கு தலையில் கொட்டான் அடி விழுந்தது. அங்கிருந்த 8 பேருக்கும் காயமேற்பட்டது. பாரதூரமான காயமடைந்த 5 பேர் வைத்தியசாலை சென்றனர்.
குறிப்பாக, முச்சக்கர வண்டியில் வந்த கொக்குவில் இளைஞர்கள் மீதே கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. அதில் ஒரு இளைஞனின் கை மணிக்கட்டு பகுதி துண்டாகியது. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வாள்வெட்டு தாக்குதல் நடத்திய பின்னர் வீட்டில் எரிபொருள் ஊற்றி தீயிட்டு விட்டு தப்பிச் சென்றனர்.
வீட்டில் இருந்த இளைஞர்கள், காரில் வந்தவர்களிற்கு பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தின் பின்னணியை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை, முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்கள் குறிவைக்கப்பட்டார்களா என்பது தெரியவில்லை.
முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதால் இன்று காலை வரை சம்பவத்தின் பின்னணி வெளியாகவில்லை. அவர்கள் சிகிச்சையின் பின் சாதாரண நிலைக்கு வந்ததன் பின்னரே இது குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகும்.