வடமராட்சி முள்ளியில் நேற்று நடந்த சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை கடந்த 27ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் நாட்டில் அமைக்கப்பட்ட 9 சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலைகளில், வடமாகாணத்தி்கான தொழிற்சாலை முள்ளியில் அமைக்கப்பட்டது.
கரவெட்டி, சவாகச்சேரி நகரசபை, பிரதேசசபை, பருத்தித்துறை நகரசபை, வலிகாமம் கிழக்கு பிரதேசசபை என சுற்றயலில் உள்ள பிரதேசசபைகளின் சேதன கழிவுகள் இங்கு இயற்கை உரமாக மாற்றப்படும்.
இது ஒரு நல்ல திட்டம் என பலரும் சமூக ஊடகங்களில் சிலாகித்து எழுதி வருகிறார்கள்.
நல்ல திட்டம்தான். ஆனால் திறப்பு விழா நடப்பதற்குள் நடந்த திரைமறைவு அசிங்க அரசியல்களை அறிந்தால் உங்களிற்கே தலையை சுற்றும்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஒருவித பகட்டு அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உண்டு. அவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், யாழ் மாவட்ட அரச நிர்வாகத்தில் வரலாற்றில் இல்லாதளவு தலையீடும், தனிநபர் துதிபாடல்களும் மேலோங்கி காணப்படுகிறது, இதனால் திறமையான பல அதிகாரிகள் பந்தாடப்படுகிறார்கள், அப்பா, சித்தப்பா, மாமன், மச்சான் அரசியலையே முன்னெடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் ஊடகங்கள், சமூக ஊடகங்களில் அடிக்கடி வருவதுதான்.
இதன் தொடர்ச்சியாக, முள்ளி சேதன பசளை தயாரிப்பு நிலையம் திறப்பு விழாவில் நடந்த அரசியல் மோதல் பற்றி பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
முள்ளி சேதன பசளை உற்பத்தி மையம் கடந்த நல்லாட்சியில் ஆரம்பித்தது. ஜெய்க்கா இந்த திட்டத்தை தொடங்கவிருந்த போது, அதற்கான திட்ட வரைபை கரவெட்டி தவிசாளர் த.ஐங்கரன் சமர்ப்பித்திருந்தார். முள்ளி சேதன பசளை மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்குரிய பகுதிகள் உள்ளன. எனினும், அப்போது கூட்டமைப்பு அரசுடன் பேசி, காணிச் சிக்கல்களை தீர்த்து வைத்தது.
ஒரு வழியாக கட்டுமான பணிகள் சில மாதங்களின் முன் முடிந்து விட்டது. எனினும், திறப்பு விழா தாமதமாகி வந்தது. அதற்கு பின்னாலும் ஒரு அரசியல் உள்ளதாக தகவல். கட்டுமான பணிகள் முடிந்த கையோடு, மாகாணசபை தேர்தல் பற்றி பேச்சுக்கள் எழுந்தன.
வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக அப்பாவை களமிறக்க திட்டமிட்டுள்ள ஒரு அரசியல்வாதியின் தலையீட்டினால், திறப்பு விழா தாமதித்ததாக அரசியலரங்கில் தகவலுண்டு. மாகாணசபை தேர்தலின் கிட்டவாக திறப்பு விழாவை நடத்தினால், ஸ்கோர் செய்யலாமென்பது திட்டம்.
அதாவது, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அரசியல்.
கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் நடந்த ஒரு கலந்துரையாடலில், கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னரும் திறக்கப்படாமலிருக்கும் சேதன பசளை தயாரிப்பு நிலையம் பற்றி பிரஸ்தாபித்துள்ளார். உடனடியாக, நாமல் ராஜபக்சவின் அமைச்சின் ஊடாக அதை திறக்கும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த புதன் கிழமையே, இந்த நிலையம் திறப்பதற்கான அறிவிப்பு வடக்கு அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாட்டையும் அமைச்சே செய்தது. அழைப்பிதழ் மாதிரி, கல்வெட்டு மாதிரி அனைத்தும் அங்கிருந்தே அனுப்பப்பட்டது.
இதன்பின்னர்தான் யாழில் சூடு பிடித்தது மோதல்.
அழைப்பிதழிலும், கல்வெட்டிலும் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரை விட முன்னதாக தனது பெயர் இடம்பெற வேண்டுமென, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பெரும் பிரயத்தனப்பட்டார்.
இதனால், புதன்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமைக்குள் நினைவுக்கல் 3 முறை திருத்தப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.
வடக்கு உள்ளூராட்சி திணைக்களம், கரவெட்டி பிரதேசசபை என்பவற்றுடன் அங்கஜன் இராமநான் தரப்பு பெரும் மல்லுக்கட்டலில் ஈடுபட்டது.
குறிப்பாக, பெயர்ப்பலகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸின் படங்கள் இடம்பெறக்கூடாது, ஜனாதிபதி, நாமல் உள்ளிட்டவர்களின் படங்களுடன் அங்கஜன் இராமநாதனின் படம் மட்டுமே இடம்பெற வேண்டுமென பெரும் மல்லுக்கட்டலில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, இந்த நிகழ்வை திட்டமிட்ட கொழும்பு அமைச்சிலிருந்து அனுப்பப்பட்ட அழைப்பிதழ், நினைவுக்கல் மாதிரிகளில் அங்கஜன் இராமநாதன்- நாடாளுமன்ற உறுப்பினர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, குழுக்களின் பிரதி தலைவர், யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்றும் பொறிக்க வேண்டுமென அங்கஜன் தரப்பு அடம்பிடித்துள்ளது.
இது பற்றி உள்ளூராட்சி திணைக்களத்துடனும் நீண்ட மல்லுக்கட்டி, நினைவுக்கல்லில் குழுக்களின் பிரதி தலைவர் என்ற வாசகத்தை பொறித்து விட்டனர். இதனால் நினைவுக்கல் 3 முறை திருத்தப்பட வேண்டியிருந்தது.
எனினும், அழைப்பிதழ் அச்சிட்ட கரவெட்டி பிரதேசசபை எந்த மாற்றத்தையும் செய்ய மறுத்து விட்டது. இதுபற்றி கரவெட்டி பிரதேசசபை தவிசாளருடன், அங்கஜன் இராமநாதனும் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்.
எனினும், கரவெட்டி பிரதேசசபை இந்த அளப்பறைகளிற்கு இடமளிக்கவில்லை.
இதேபோல, இந்த நிகழ்வில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு அதிகாரிகள், அமைச்சர்கள் என 27 பேர் மட்டுமே கலந்து கொள்ள சுகாதாரத்துறை அனுமதித்திருந்தது. எனினும், பந்தா அரசியலுக்காக அங்கஜன் தரப்பு அந்த விதியையும் மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பிட்டளவானவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியுமென்பதால், சேதன பசளை வளாகத்திற்குள் ஏனையவர்களை பொலிசார் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, அங்கஜன் தரப்பின் இளைஞர்கள் உள்ளிட்ட ஒரு குழுவினர் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் தரித்து நிற்க, அஙகஜன் தரப்பின் உத்தியோகபூர்வ வாகனம் பலமுறை சென்று அவர்களை ஏற்றி வந்து, நிகழ்வு வளாகத்திற்குள் இறக்கி விட்டது. பொலிசாரால் இதை தடுக்க முடியவில்லை.
விழாவிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்க, கரவெட்டி பிரதேசசபை ஒரு ஏற்பாடு செய்திருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாலையிட தயார் நிலையில் ஆட்கள் இருந்தனர்.
எனினும், அதற்குள் இடையில் புகுந்த அங்கஜன் தரப்பினர், அங்கஜன் மற்றும் நாமலிற்கு- விசேடமாக அங்கஜனிற்கு அதிகமாக- மாலைகள் இட்டார்கள். அதாவது, அங்கஜன் தரப்பினர், தமக்கு மாலையிடவும் தமது தரப்பினரையே அழைத்து வந்திருந்தனர்.