இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் அனைவருக்குமே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
பெங்களூரு ஒசகெரேஹள்ளியை சேர்ந்தவர் கவுசிக்(வயது 24). இவர் பனசங்கரியில் உள்ள உடற்பயிற்சி மையத்திற்கு தினமும் சென்று உடலை கட்டுக்கோப்பாக வைக்க பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில் அந்த உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக பணியாற்றும் கிரிநகரை சேர்ந்த மோகன் என்பவர், கவுசிக்கிடம் கட்டுக்கோப்பான உடற்கட்டை (சிக்ஸ்பேக்) 3 மாதத்தில் வரவைப்பதாகவும், இதற்காக தனக்கு ரூ.2 லட்சம் தர வேண்டும் என்றும் கேட்டு உள்ளார்.
இதனால் கவுசிக் ரூ.2 லட்சத்தை மோகனிடம் கொடுத்தார். பின்னர் பல்வேறு காரணங்களை கூறி கவுசிக்கிடம் இருந்து மோகன் மேலும் ரூ.5 லட்சத்தை பெற்றதாக தெரிகிறது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் கவுசிக்குக்கு சிக்ஸ்பேக் வரவில்லை என்று தெரிகிறது.
இதனால் தான் கொடுத்த ரூ.7 லட்சத்தை திரும்ப தரும்படி மோகனிடம், கவுசிக் கேட்டு உள்ளார். ஆனால் ரூ.7 லட்சத்தை திரும்பி தராமல் மோகன் மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து கவுசிக், மோகன் மீது கிரிநகர் பொலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பொலீசார் மோகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாகிவிட்ட மோகனை பொலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.