என்னதான் லட்சம் லட்சமாக பணம் கொடுத்து ஒரு போன் வாங்கினாலும் அதை ஒரு மொபைல் ஃபோன் நெட்வொர்க் உடன் இணைக்காம யாருக்குமே அழைக்கவோ இணைய சேவையை பயன்படுத்தவோ முடியாது
இதில் ஒரு நெட்வொர்க்கைத் தேர்ந்தெடுக்கும்போது தான், ஒருத்தருக்கு அழைக்கவோ, இணைய சேவையை பயன்படுத்தவோ முடியும். அதுக்கு முதலில் நீங்கள் ஒரு SIM கார்டு வாங்கணும். ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த ஒப்புக்கொண்டு ஒரு குறிப்பிட்ட திட்டத்தைப் பெற தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு சந்தாதாரர் ஆக வேண்டும். அதெல்லாம் இரண்டாம் பட்சம், ஆனால் முதலில் நமக்கு தேவை எல்லாம் ஒரு SIM கார்ட்.
SIM கார்ட் என்றால் என்ன?
இந்த SIM கார்ட் அப்படிங்கிறது Subscriber Identity Module அதாவது சந்தாதாரர் அடையாள தொகுதி என்று சொல்லுவார்கள். SIM கார்டு முதன்முதலில் ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள ஸ்மார்ட் கார்ட் தயாரிப்பாளரான கீசெக் மற்றும் டெவ்ரியண்ட் (Giesecke and Devrient) ஆகியோரால் 1991 இல் கண்டுபிடிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை தொழில்துறையில் பல புரட்சிகளுக்கு இது காரணமாக அமைந்துள்ளது. இந்த SIM கார்ட் ஒரு குறிப்பிட்ட தொலைபேசியை ஒரு குறிப்பிட்ட நெட்வொர்க் உடன் இணைக்க செய்யும்.
நெட்வொர்க் வழங்குநரின் தரவுத்தளத்துடன் உங்கள் அடையாளத்தைக் இணைக்கும் தனித்துவமான குறியீடுகளை இந்த SIM கார்டு கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட நெட்வொர்க்குகளுடன் இணைக்க இந்த குறியீடுகள் தான் உதவுகின்றன.
IMSI என்றால் என்ன?
அதுமட்டுமில்லாமல் SIM கார்டில் International Mobile Subscriber Identity (IMSI) அதாவது சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளம் என அழைக்கப்படும் தனித்துவமான 64-bit எண்ணும் உள்ளது. எப்போதும் ஒரே மாதிரியாக இரண்டு IMSI எண்கள் இருக்கவே முடியாது. கூடுதலாக, SIM கார்டில் தனித்துவமான authentication key எனும் அங்கீகார விசையும் இருக்கும்.
உங்கள் ஸ்மார்ட்போனை switch on செய்யும் போது, SIM கார்ட் நெட்வொர்க் உடன் இணைய சிக்னலைத் தேடத் தொடங்கும். SIM கார்ட் நெட்வொர்க்கைக் கண்டறிந்ததும், உங்கள் IMSI எண்ணையும் தனிப்பட்ட அங்கீகார விசையையும் நெட்வொர்க் டவருக்கு அனுப்பும்.
நெட்வொர்க் டவர் உங்கள் இணைப்பு கோரிக்கையைப் பெற்றதும் நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்த உங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா என்பதை சரிபார்க்கும். அதன் தரவுத்தளத்தில் உங்கள் IMSI எண்ணை ஸ்கேன் செய்யும். அதே சமயத்தில், அதன் தரவுத்தளத்தில் IMSI எண்ணுடன் ஒதுக்கப்பட்டுள்ள அங்கீகார விசையையும் தேடும். இந்த அங்கீகார விசையை ‘1’ என வைத்துக்கொள்வோம்.
SIM நெட்வொர்க் உடன் இணைவது எப்படி?
உங்கள் அடையாளம் சரிபார்க்கப்பட்டதும், அங்கீகார விசை ‘1’ உடன் உங்கள் அடையாளத்தை அங்கீகரிக்கும், அதே நேரத்தில் டவர் சுயமாக ஒரு சீரற்ற விசை ஒன்றை உருவாக்கும். இந்த விசையை ‘2’ என வைத்துக்கொள்வோம்.
இப்போது நெட்வொர்க் டவர் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு விசை 2 ஐ அனுப்பும், அதோடு ‘1’ அங்கீகார விசையையும் உங்கள் தொலைபேசிக்கே மீண்டும் அனுப்பும். உங்கள் தொலைபேசி அங்கீகார விசையையும் சீரற்ற விசையையும் ஸ்கேன் செய்து மற்றொரு விசையை உருவாக்கும். இதை ‘3’ என வைத்துக்கொள்வோம்.
இப்போது இந்த விசை ‘3’ மீண்டும் அதே அங்கீகார விசையுடன் நெட்வொர்க்கிற்கு அனுப்பப்படும். இது 2 மற்றும் 3 விசையை பகுப்பாய்வு செய்யும். இப்போது ஒரே அங்கீகார விசையைப் பயன்படுத்தி, 2 மற்றும் 3 விசைகள் இரண்டும் பொருந்த வேண்டும். அப்படி பொருந்தினால், நெட்வொர்க்குடன் போனுக்கான அணுகல் வழங்கப்பட்டு அது தரவுத்தளத்தில் சேமிக்கப்படும்.
SIM பாதுகாப்பானதா?
ஏன் பல விசைகள் உருவாக்கப்படுகின்றன என்று உங்களுக்கு தோன்றலாம், இதற்கான காரணம் உங்கள் பாதுகாப்பு தான். ஒரே மாதிரியான அங்கீகார விசை மற்றும் சீரற்ற விசை இருந்தால் மட்டுமே நெட்வொர்க் உடன் உங்கள் போன் இணைய முடியும். இதனால் வேறு யாரும் உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி இணைக்க முடியாது. எனவே உங்கள் நெட்வொர்க் பாதுகாப்பாக இருக்கவும் நெட்வொர்க் வழியே நீங்கள் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கவும் இந்த செயல்முறைகள் செய்யப்படுகிறது.
இந்த பாதுகாப்பு செயல்முறை அனைத்து நெட்வொர்க்களுக்கும் பொருந்தும். இப்போது உங்கள் SIM கார்ட் நெட்வொர்க் உடன் இணைந்த பிறகு நெட்வொர்க் சேவை வழங்குநர் வழங்கும் சேவையைப் பெற முடியும். அழைப்பு சேவை, இணைய சேவை அனைத்துமே இதனால் சாத்தியமாகிறது.
இப்போது நெட்வொர்க் சேவை வழங்குநர் வழங்கும் திட்டங்களுக்கு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி சந்தாதாரர் ஆவதன் மூலம் ஆண்டிபட்டி முதல் அமெரிக்கா வரை அனைத்து பகுதிகளுக்கும் தகவல் பரிமாற்றம் சாத்தியமாகிறது.